10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டு நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.
அதாவது, ஐ.பி.எல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஐ.பி.எல் அணிகள் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ-யிடம் சமர்ப்பிக்க காலக்கெடு நாளை வியாழக்கிழமையுடன் (அக்டோபர் 31) நிறைவடைகிறது.
2025 ஆம் ஆண்டு சீசனை தொடங்க அணிகள் முக்கிய மாற்றங்கள் செய்ய காத்திருக்கும் நிலையில், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளில் நிகழ இருக்கும் மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஐ.பி.எல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் நாளை 10 அணிகள் சமர்ப்பிக்கும் தக்கவைப்பு பட்டியலை எப்படி நேரலையில் லைவ் ஆக பார்ப்பது என்பது பற்றி இங்குப் பார்க்கலாம்.
ஐ.பி.எல் 2025 தக்கவைத்தல் முக்கிய விதிகள்
ஐ.பி.எல் 2025 தக்கவைப்பு விதிகளின்படி, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அல்லது ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் போது ரைட்-டு-மேட்ச் (ஆர்.டி.எம்) கார்டு மூலம் ஒரு அணியானது அதிகபட்சமாக ஆறு வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
ஒரு அணியின் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக அதிகபட்சமாக ஐந்து கேப்டு மற்றும் இரண்டு அன்கேப் பிளேயர்கள் இருக்கலாம். ஒவ்வொரு தக்கவைப்பு வீரர்களின் தொகை பின்வருமாறு:
கேப்டு பிளேயர் 1 (ரூ. 18 கோடி), கேப்டு பிளேயர் 2 (ரூ. 14 கோடி), கேப்டு பிளேயர் 3 (ரூ. 11 கோடி) மற்றும் கேப்டு பிளேயர் 4 (ரூ. 18 கோடி) என குறிக்கப்பட்டுள்ளது. அனைத்து அன்கேப் வீரர்களையும் ரூ.4 கோடியில் தக்க வைத்துக் கொள்ளலாம். தக்கவைக்கக்கூடிய வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையில் எந்த வரம்பும் இல்லை.
ஒரு அணி தனது எந்த வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளாமல், 6 ஆர்.டி.எம் கார்டுகளுடன் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் நுழையலாம். மெகா ஏலத்தில் நுழையும் போது, ஒரு அணியானது ரூ.120 கோடி பர்ஸைக் கொண்டிருக்கும்.
ஐபிஎல் 2025 வீரர்கள் தக்கவைப்புக்கான காலக்கெடு நாள் மற்றும் நேரம் என்ன?
10 அணிகள் தங்கள் ஐபிஎல் 2025 தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை நாளை அக்டோபர் 31, வியாழக்கிழமை மாலை 5 மணி காலக்கெடுவிற்குள் சமர்பிக்க வேண்டும்.
ஐபிஎல் 2025 வீரர்கள் தக்கவைப்பு நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு
ஐபிஎல் 2025 வீரர்கள் தக்கவைப்புகளை டி.வி-யில் எப்போது, எங்கு பார்க்கலாம்?
ஐபிஎல் 2025 வீரர்கள் தக்கவைப்பை நாளை அக்டோபர் 31, வியாழன் அன்று மாலை 4 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 சேனல்களில் ஒளிபரப்பப்படும்.
ஐபிஎல் 2025 வீரர்கள் தக்கவைப்பு லைவ் ஸ்ட்ரீமிங்
ஐபிஎல் 2025 வீரர்கள் தக்கவைப்பு நிகழ்வை ஆன்லைனில் நேரலையில் பார்ப்பது எப்படி?
ஐ.பி.எல் 2025 தக்கவைப்பு அக்டோபர் 31, வியாழன் அன்று மாலை 4:30 மணி முதல் ஜியோசினிமா ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் லைவ் ஆக பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.