/indian-express-tamil/media/media_files/2025/03/26/ASC3yq7wkdvu608L2ufw.jpg)
IPL 2025, RR vs KKR Cricket Score Updates: 18-வது ஐ.பி.எல். தொடரில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் 2025 தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடி முடித்துவிட்டனர்.
இந்நிலையில், இந்த ஐ.பி.எல் தொடரின் 6-வது லீக் ஆட்டம் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மார்ச் 26) மோதுகின்றன.
முந்தைய போட்டிகளில், கொல்கத்தா அணி பெங்களூரு அணியுடனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும் தோல்வியைத் தழுவினர். அதனால், இந்த போட்டியில், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் களம் இறங்குகின்றனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரியான் பராக் 25 ரன்னில் அவுட் ஆனார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று ஆடினாலும், அவர் 29 ரன்னிலும், அடுத்து வந்த ஹசரங்கா 4 ரன்னிலும், நிதிஷ் ராணா 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ஷுபம் துபே 9 ரன்னில் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய ஜுரெல் 33 ரன்னிலும், அடுத்து வந்த ஹெட்மையர் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி, ஹர்சித் ரானா, வைபவ் அரோராவின் சிறப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி திணறியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மகேஷ் தீக்சனா ஜோடி விளையாடினர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 33 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்கா ஆட்டக்காரர்களாக மொயீன் அலி மற்றும் குயிண்டன் டிகாக் களமிறங்கினர். மொயீன் அலி 5 ரன் எடுத்திருந்த நிலையில், 7வது ஓவரில் மஹீஷ் தீக்ஷனாவால் ரன் அவுட் செய்யப்பட்டார் அடுத்து வந்த அஜிங்கியா ரஹானே, குயிண்டன் டிகாக் உடன் ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக விளையாடிய குயிண்டன் டிகாக் அரைசதம் அடித்தார். கேப்டன் அஜிங்கியா ரஹானே ஹசரங்கா பந்தில் துஷார் தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, குயிண்டன் டிகாக் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் குயிண்டன் டிகாக் 61 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 97 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள்:
அஜிங்கியா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே, ராமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், மொயீன் அலி, அனுகுல் ராய், வெங்கடேஷ் ஐயர், குயிண்டன் டிகாக், ரஹ்மானுல்லா குர்பாஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்:
சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, ஷிம்ரோன் ஹெட்மையர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பிராக் (கேப்டன்), வனிண்டு ஹசரங்கா, துருவ் ஜுரெல், மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, கெவினா மபாக
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.