/indian-express-tamil/media/media_files/2025/05/02/erCjQcsv49ZpsuL1kAS0.jpg)
’இளம் புயல்’ சூர்யவன்ஷியை டக் அவுட் செய்தது எப்படி? - மும்பை வீரர் தீபக் சாஹர் தகவல்
14 வயதே ஆனா ராஜஸ்தான் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி குஜராத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 35 பந்துகளில் அதிவேக சதமடித்து அசத்தினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ஆனால் நேற்று (மே 1-ம் தேதி) நடந்த போட்டியிலேயே தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறினார்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு செய்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி அதிவேகமாக ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடித்து அசத்தினர். அடுத்த வந்த சூர்ய குமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடிகாட்ட ரன்கள் ராக்கெட் வேகத்தில் ஏறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை மும்பை குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரில் சூர்யவன்சியையும், 2-வது ஓவரில் ஜெய்ஸ்வாலையும் இழந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் இறுதியில், ராஜஸ்தான் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 7 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது மும்பை அணி. 11 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து 2-வது அணியாக வெளியேறியுள்ளது.
இந்த விக்கெட் இழப்பு பற்றி தீபக் சஹார் பேசும்போது, “இளம் வீரராக மிகுந்த கவனத்தை பெற்றுள்ள சூர்யவன்ஷியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ததில் மகிழ்ச்சி” என்றார். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம்வீரர் சூர்யவன்ஷியை அவுட் செய்ததை தொடர்ந்து போட்டியிற்கு பிறகு கூறியதாவது: “குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சூர்யவன்ஷி விளையாடிய இன்னிங்ஸ் பாராட்டத்தக்கது. அவர் அருமையாக ஆடியிருந்தார். ஒவ்வொரு பேட்ஸ்மனுக்கும் ஒரு தளத்தில் பலம் இருந்தால், மற்றொரு தளத்தில் பலவீனம் இருக்கும். அந்த அடிப்படையில் நாங்கள் ஒவ்வொரு பேட்ஸ்மனுக்கும் தனித்தனியாக திட்டம் வகுப்போம். அவர் மட்டும் அல்லாமல் எல்லோருக்குமே அதே முறையே வகுப்போம்.
இன்னும் சில சமயம் திட்டம் வேலை செய்யும், சில சமயம் செய்யாது. இன்று அது நம்பக்கம் வேலை செய்தது, அதிர்ஷ்டவசமாக எனக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சூர்யவன்ஷி மிக திறமையானவர், எதிர்காலத்தில் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்,” என சஹார் தெரிவித்தார். இதே பேட்டியில் அவர் அணியின் கலந்தாய்வு மற்றும் திட்டமிடும் செயல்முறையைப் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ராஜஸ்தான் 218 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடியபோது, வெறும் 117 ரன்களில் தான் ஆல் அவுட் ஆனது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.