ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. ஐ.பி.எல்.-ன் 1818-வது சீசன் இந்த வருடம் சென்னையில் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உடன் மோதுகிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23 ஆம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று மார்ச் 19 காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்வையாளர்கள் www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.
கூட்ட நெரிசல், கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றை தவிர்க்க மைதானத்தில் உள்ள கவுண்ட்டர் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.
போட்டி நடைபெறும் நாள் மார்ச் 23 அன்று மாலை 5 மணி முதல் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஐ.பி.எல் போட்டிகளின் போது விளையாட்டு அரங்குகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போதும் மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களைக் கூட அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்துக்குள் பிளாஸ்டிக் பைகள், சிகரெட், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள், திண்பண்டங்கள், செல்லப்பிராணிகள் உள்ளிட்டவற்ற எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.