10 அணிகள் பங்கேற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த செவ்வாய்கிழமையுடன் முடிந்தது. இந்த சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 4-வது முறையாக பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த பஞ்சாப் அணி 2-வது தகுதி சுற்றில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்கி நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.
முன்னாள் சாம்பியனான நடப்பு தொடரில் குஜராத் அணி 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 3-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மறுபுறம், 5 முறை சாம்பியனான மும்பை அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 11-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இரு அணிகளுமே சம பலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 7 போட்டிகளில் குஜராத் 5 முறை வென்றுள்ளது. அதேநேரத்தில், மும்பை 2 முறை வென்றுள்ளது. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ரோகித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ரோகித் சர்மாவும், ஜானி பேர்ஸ்டோவும் (Bairstow) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவர்களில் 84 ரன்கள் குவித்து அபாரமான தொடக்கத்தை அளித்தது. அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் எடுத்து தங்களது பங்கிற்கு ரன்களைச் சேர்த்தனர்.
இறுதியில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சில சிக்சர்களை விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்து மிரட்டியது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களம் இறங்கியது. குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஆனால், அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 20 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார். அவர் அதிரடியாக 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர், ரூதர்போர்டு மற்றும் ராகுல் திவேதியா ஜோடி சேர்ந்தனர். ரூதர்போர்டு 24 ரன்களில் வெளியேற, ஷாரூக் கான் களமிறங்கினார்.
இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை தரப்பில் பவுல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் எடுத்த 80 ரன்களே அதிகபட்சமாகும்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது. நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெறும் இந்த தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, ஏற்கனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியுடன் மோதும். குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியுடன் இந்த தொடரில் இருந்து வெளியேறியது.