10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெற 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், 18 சீசன்களாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் களமாட முதல் முறையாக ஏலத்தில் பதிவு செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் இங்கிலாந்து ஜாம்பவான் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்த நிலையில், கிரிக்கெட்டில் கத்துக் குட்டியாக இருந்து வரும் இத்தாலியில் இருந்து வீரர் ஒருவர் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பங்கேற்க தன்னைப் பதிவு செய்துள்ளார்.
கால்பந்துக்கு பெயர் பெற்ற நாடான இத்தாலியில் இருந்து ஐ.பி.எல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளார் தாமஸ் ஜாக் டிராகா. வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான அவர் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தனது தேசிய அணிக்காக டி-20 போட்டிகளில் அறிமுகமானார். மேலும், அவர் நான்கு ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
24 வயதான அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஐ.எல்.டி20 (ILT20) லீக்கில், வரவிருக்கும் சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியால் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனுபவமற்ற அவரை எந்தத் தரப்பும் விரும்புகிறதா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர் கனடாவின் டி20 லீக் தொடரில், டேவிட் வார்னரின் தலைமையிலான பிராம்ப்டன் வுல்வ்ஸுடன் அணிக்காக ஆடியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“