ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கிய நடைபெற்று வரும் இந்த ஏலத்தில், 2-வது நாளான இன்று திங்கள்கிழமை, ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
18-வது சீசனை அடியெடியெடுத்து வைத்திருக்கும் ஐ.பி.எல். தொடரில், 13 வயது, 243 நாட்கள் ஆன வைபவ் சூர்யவன்ஷியை வசப்படுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே போட்டி நடந்தது. இறுதியில், அவரை ராஜஸ்தான் அணி ரூ. 1.1 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் தனது 13 வது வயதில் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இவர் கடந்த ஆண்டு, தனது 12 வயதில் ரஞ்சி டிராபி தொடரில் அறிமுகமாகி, இத்தொடர் வரலாற்றில் அறிமுகமான இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். பீகார் அணிக்காக விளையாடிய அவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்தார்.
வைபவ் தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார் என்றும், தனது தந்தையின் ஆரம்ப வழிகாட்டுதலைப் பெற்றார் என்றும் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இதுவரை இரண்டு முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிராக கடந்த அக்டோபரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அண்டர் 19 அணிக்காக களமாடி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் வைபவ் சூர்யவன்ஷி. அவர் 62 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவர் 104 ரன்னில் அவுட் ஆகிய நிலையில், சதம் விளாசியதன் மூலம் சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்த 2-வது இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி 56 பந்தில் சதம் அடித்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை அன்று வைபவ் சூர்யவன்ஷி தனது சையத் முஷ்டாக் அலி டிராபியில் அறிமுகமானார், பீகார் அணிக்காக ராஜஸ்தானுக்கு எதிராக ராஜ்கோட்டில் களமிறங்கி இருந்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் அனிகேத் சவுத்ரி பந்தில் இரண்டு சிக்ஸர் விளாசிய அவர் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய வைபவ்வின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் விளையாட்டின் மீதான தனது சொந்த ஆர்வமே தனது மகனை இந்தியாவின் உள்நாட்டு போட்டிக்கு விரைவாக முன்னேறி செல்ல தூண்டியது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
"நான் கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தேன். ஆனால் பீகாரில் கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டுக்கும் ஸ்கோப் இல்லை. நான் 19 வயதில் மும்பைக்குச் சென்று கொலாபாவில் உள்ள இரவு விடுதியில் பவுன்சராக வேலை செய்வது, சுலப் டாய்லெட்டில் அல்லது துறைமுகத்தில் வேலை செய்வது என பல வேலைகளைச் செய்தேன். நான் எனது ஓய்வு நாட்களை ஓவல் மைதானத்தில் கழித்தேன். அங்கு கிரிக்கெட் விளையாடும் சிறு குழந்தைகள் பேட்கள் மற்றும் ஹெல்மெட்களால் மூடப்பட்டிருப்பார்கள். அவற்றை மணிக்கணக்கில் பார்க்கக்கூடிய அளவுக்கு நன்றாக இருந்தன. மகனாக இருந்தாலும் சரி, மகளாக இருந்தாலும் சரி, என் குழந்தைகளை கிரிக்கெட் வீரர்களாக்குவேன் என்று அப்போதுதான் முடிவு செய்தேன்” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் சஞ்சீவ் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“