ஐபிஎல் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை கொல்கத்தா வீழ்த்தியது. இந்த போட்டியில் 7-ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய தோனி, 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நேற்று நடந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை தோனி (40 ஆண்டுகள் 262 நாட்கள் ) படைத்துள்ளார்.
இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் (40 ஆண்டுகள் 116 நாட்கள் ) தன் வசம் வைத்து இருந்தார். இந்த சாதனையை 2013ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ராகுல் டிராவிட் செய்திருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் (39 ஆண்டுகள் 362 நாட்கள் ) இருந்தார். இந்த சாதனையை 2013இல் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் படைத்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனைகளை டோனி முறியடித்துள்ளார்.
மலிங்காவின் சாதனையை சமன் செய்த பிராவோ
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்காவின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவெயின் பிராவோ சமன் செய்தார்.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் மலிங்காவுடன் இணைந்தார்.
தனது கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் புதிய வீரர் சாம் பில்லிங்ஸின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், பிராவோ தன்னுடைய 170 வது விக்கெட்டை பெற்றார்.
அமித் மிஸ்ரா 154 போட்டிகளில் 166 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா 165 போட்டிகளில் 157 விக்கெட்டுகளையும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஹர்பஜன் சிங் 160 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக முடிவு எடுத்தது எப்போது?
சென்னை அணியின் கேப்டன் பதவியை டோனி கைவிடுவது குறித்த முடிவு திடீரென எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் போதே இது தொடர்பாக நாங்கள் (பிளமிங், டோனி) பேசினோம். கேப்டன் பதவியை கைவிடுவது குறித்து டோனி கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் போதே என்னிடம் பேசினார் என்று சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார்.
முன்னதாக, ஐபிஎல் தொடங்க இருந்த சில தினங்களுக்கு முன்பு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். அதையடுத்து, கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பரின் சதத்தால் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.
5 டி20 தொடர் கொண்ட போட்டியை வெஸ்ட் இண்டீஸ் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து, 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் இரண்டு ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் 3ஆவது டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.
கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து.
இதையும் படியுங்கள்: இணையும் புதிய வீரர்கள்; ஜடேஜா கேப்டன்சிக்கு என்ன சவால்?
2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷுவா டா சில்வாவின் சதத்தால் அந்த அணி 297 ரன்கள் எடுத்தது. அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் பதிவு செய்ததுடன் அணியின் ஸ்கோர் உயர்வதற்கும் காரணமாக இருந்தார்.
இதையடுத்து, 93 ரன்கள் பின்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது.
3ஆவது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து அந்த அணி தள்ளாடி வருகிறது.
இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.