IPL Cricket 2021 SunRisers Hyderabad : 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தொற்று பாதிப்பு காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. 8 அணிகள் பங்கேற்று வரும் இந்த தொடரில் அனைத்து அணிகளும் முதல் சுற்று ஆட்டமான சுமார் 7 ஆட்டங்களை நிறைவு செய்துள்ளது.
தொடர்ந்து நாளை முதல் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய கேப்டனை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த சில வருடங்களாக அந்த அணியின் கேப்டனான இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் டேவிட் வார்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மற்றும் இனி வரும் மீதமுள்ள போட்டிகள் அனைத்திற்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் பொறுப்பேற்பார். அணியின் நலனை கருத்தில் கொண்டு கேப்டனை மாற்ற அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும், அதன் உரிமையாளருக்கு சிறந்த பங்களிப்பை கொடுத்திருந்தார். மீதமுள்ள போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கும்போது களத்தில் வெற்றிபெறவும் களத்திற்கு வெளியே ஆலோசனை வழங்கவும் டேவிட் வார்னர் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு தொடரில் கொல்கத்தா, பெங்களூர், மும்பை ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணி, 4-வது போட்டியில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து 5-வது போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லியிடம் வீழ்ந்த நிலையில்,6-வது போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் நடப்பு தொடரில் ஐதராபாத் அணி 6 போட்டிகளில் 1-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil