16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி 4 தோல்வியுடன் 13 (லக்னோவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது) புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் சென்னை அணி ப்ளே அப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இனி வரும் 3 ஆட்டங்களில் கணிசமான வெற்றியை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
அதேபோல் 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள வார்னர் தலைமையிலான டெல்லி அணிக்கு இனி வரும் 4 போட்டிகளும் முக்கியமான போட்டியாக உள்ளது. இதில் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளில் வெற்றி தோல்வியை பொறுத்தே அந்த அணியின் ப்ளேஅப் வாய்ப்பு அமையும். இருந்தாலும் கடைசியாக நடந்த 2 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ள டெல்லி அணி தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் போட்டி நடைபெறுவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருந்தாலும் சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் சென்னை அணிக்கு தலைவலியை கொடுக்க தயாராக உள்ளனர். அதேபோல் சென்னை அணியில் உள்ள ஜடேஜா, மொயின் அலி, தீக்ஷனா ஆகியோர் டெல்லி அணிக்கும் நெருக்கடி கொடுப்பார்கள்.
டெல்லி அணியின் குல்தீப் யாதவ் இதுவரை 10 போட்டிகளில் 8 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் 10 போட்டிகளில் 7 விக்கெட்டும் வீழ்த்தி மந்தமான பந்துவீச்சு ரெக்கார்டை வைத்திருப்பதால், சென்னை அணியின், ஷிவம் துபே, டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தங்களது அசத்தல் ஃபார்மை தொடர முயற்சிக்கலாம். அதே சமயம் சென்னை மைதானத்தில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு குல்தீப் மற்றும் அக்சர் இருவரும் முதல்கட்ட ஓவர்களை வீசினால், டெல்லி அணியின் 3-வது ஸ்பின்னராக 26 வயதான லலித் யாதவ் ஆடும் லெவன் அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது.
அக்சரின் பந்துவீச்சு முக்கியமானதாக இருந்தாலும், இந்த சீசனில் பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபித்துள்ளார். 10 போட்டிகளில் விளையாடி 246 ரன்கள் குவித்துள்ள அவர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் வார்னருக்கு அடுத்து 2-வது இடத்தில் உள்ளார். சுழற்பந்துவீச்சை திறம்பட சமாளிக்கும் அக்சர் பட்டேல் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முன்வரிசையில் களமிறங்க வாய்ப்புள்ளது.
பனிப்பொழிவு காரணமாக சென்னை அணி இரண்டாவதாக பந்துவீச வேண்டிய நிலை ஏற்பட்டால், அணி வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்குமா என்பதைப் அணி நிர்வாகம் நிச்சயமாக பரிசீலிக்கும் என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறியுள்ளார். முதல் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்டோக்ஸ் உடல் தகுதியுடன் விளையாடி தயாராக இருக்கிறார் என்றும், பிச்சின் தன்மையை பொறுத்து அணியில் அவரை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் ஹஸி கூறியுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“