scorecardresearch

உலகின் டாப் 3 ஆல் ரவுண்டர்களும் நம்ம பக்கம்: இந்த முறை சி.எஸ்.கே கெத்து இதுதான்!

ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ள சிஎஸ்கே அணி வரும் 15-வது சீசனுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

CSK Allrounders
சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த பெருமை ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உண்டு. ஆஸ்திரேலியாவின் பிரபலமான பிக்பாஷ் டி20 லீக் இருந்தாலும், கடந்த 2008-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்.

கோடை காலத்தில் தொடங்கப்படும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 15-வது சீசன் வரும் மார்ச் 31-ந் தேதி தொடங்குகிறது. இதில் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 சீசன்களில் விளையாடி 10முறை ப்ளேப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அதிக சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து கேப்டனை மாற்றாத ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.

இந்த வகையில் ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ள சிஎஸ்கே அணி வரும் 15-வது சீசனுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியிகளில் டாப் 3 இடத்தில் உள்ள முன்னணி ஆல்ரவுண்டர்களை சென்னை அணி தன்வசம் வைத்துள்ளது.

1. ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

சென்னை அணியின் துருப்புச்சீட்டு என்று அழைக்கப்படும் ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக உள்ளார். தற்போது 34-வயதாகும் இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் சென்னை அணியில் விளையாடி வருகிறார். பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தும் ஜடேஜா இறுதிக்கட்ட ஓவர்களில் பேட்டிங்கில் அணிக்கு பலரும் சேர்ப்பார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 210 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 2502 ரன்கள் சேர்த்துள்ளார். பந்துவீச்சில் 132 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2 அரைசதங்கள் அடித்துள்ள இவரின் அதிகபட்ச ரன் 62- ஆகும். பந்துவீச்சில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது இவரின் சிறந்த பந்துவீச்சாகும்.

2. மொயின் அலி

மொயின் அலி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவர் மொயின் அலி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த மொயின் அலி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பாக மொயின் அலி 8 கோடிக்கு சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 44 போட்டிகளில் விளையாடியுள்ள மொயின் அலி, 910 ரன்கள் குவித்துள்ளார். இதில் 93 ரன்கள் எடுத்ததே ஒரு போட்டியில் இவரின் அதிகபட்ச ரன்னாகும். அதேபோல் பந்துவீச்சில், 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மொயின் அலி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சை நிரூபித்துள்ளார். 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொயின் 15 போட்டிகளில் விளையாடி 357 ரன்கள் குவித்திருந்தார்.

3. பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் – தோனி

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் கடந்த 2017-ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் தோனியுடன் இணைந்து விளையாடியுள்ளார். அதன்பிறகு 2018-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்றார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 43 போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 920 ரன்கள் குவித்துள்ளார். இதில் கடந்த 2020-ம் ஆண்டு 107 ரன்கள் எடுத்ததே இவரின் அதிகப்பட்ச ஸ்கோராகும். பந்துவீச்சில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பென் ஸ்டோக்ஸ் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சாகும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த முன்னணி ஆல்ரவுண்டர்களான இவர்கள் மூவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள். இதில் ஜடேஜாவை தவிர மற்ற இருவரும் வலதுகை பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl cricket 2023 world top 3 allrounders in csk team jadeja moeen seokes