CSK vs RCB | Chennai Super Kings vs Royal Challengers Bengaluru IPL 2024 Live Score: இந்தியாவில் ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs RCB Live Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில், விராட்கோலி – டூபிளசி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் விராட்கோலி ஒருபக்கம் நிதாமாக விளையாட மறுமுனையில் டூபிளசி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதனால் பெங்களூர் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அணியின் ஸ்கோர் 4.3 ஓவர்களில் 41 ரன்களை எட்டியபோது, டூபிளசி ஆட்டமிழந்தார். 23 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரியுடன் 35 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய ரஜத் படிதார், மேக்ஸ்வெல் இருவருமே ரன் கணக்கை தொடங்காமலே பெவிலியன் திரும்பிய நிலையில், நிதான ஆடடத்தை வெளிப்படுத்திய விராட்கோலி, 20 பந்துகளில் ஒரு சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த கேமரூன் கிரீன் 22 பந்துகளில் 18 ரன்கள் குவித்து வெளியேறியதால், பெங்களூர் அணி 78 ரன்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் சென்னை அணி கை சற்று ஓங்கியிருந்த நிலையில், 6-வது விக்கெட்டுக்கு இணைந்த அனுஜ் ராவத் – தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை பிரிக்க சென்னை அணி மேற்கொண்ட முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் அனுஜ் ராவத் ரன் அவுட் ஆனார். 25 பந்துகளை சந்தித்த அனுஜ் ராவத் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 48 ரன்களும், 26 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 ரன்களும் எடுத்தனர். இவர்கள் இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்தனர்.
சென்னை அணி தரப்பில் முஸ்தாபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும் தீபக் சஹார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 174 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, முதல் பந்தில் பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட், 15 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். குறிப்பாக ஐபிஎல் போட்டியில் அறிமுகமான ரவீந்திரா அதிரடியாக விளையாடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 15 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 37 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அடுத்து ஜடேஜா 19 பந்துகளில் 2 சிக்சருடன் 27 ரன்களும், டேரல் மீச்செல் 18 பந்துகளில் 2 சிக்சருடன் 22 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். 110 ரன்களுக்கு சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிவம் டூபே – ரவீந்திர ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடி சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. 18.4 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2024 ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்க்கும் தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Mar 23, 2024 00:14 ISTடூபே - ஜடேஜா ஜோடி அபாரம் : சென்னை அணி அபார வெற்றி
கடைசி 2 ஓவர்களில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், 16-வது ஓவரில் 3-வது மற்றும் 4-வது பந்தில் சிக்சர் விளாசிய சிவம் டூபே சென்னை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். 18.4 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டூபே 28 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 1 சிக்சருடன் 25 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
-
Mar 22, 2024 23:18 ISTஅடுத்தடுத்து விக்கெட் : சென்னை அணி திணறல்
தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய சென்னை அணியில் ரச்சின் மற்றும் ரஹானே இருவரும் அடுத்தடுத்து ஆட்டமழந்த நிலையில், தற்போது மீச்சேல் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.
-
Mar 22, 2024 22:49 ISTரச்சின் ரவீந்திரா அவுட்
தொடக்க வீரராக களமிறங்கி 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்த அறிமுக வீரர் ரச்சின் ரவீந்திரா கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 7 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 22, 2024 22:36 ISTகேப்டன் ருத்துராஜ் அவுட்
174 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 15 ரன்கள் எடுத்து கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார்
-
Mar 22, 2024 22:25 ISTபவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ருத்துராஜ்
முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியால் சென்னை அணி 2 ஓவர்களில் 13 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 22, 2024 21:46 ISTஅனுஜ் ராவத் அதிரடி : சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 38 ரன்களும், அனுஜ் ராவத் 48 ரன்களும் எடுத்தனர். 6-வது விக்கெட்டுக்கு அனுஜ் - தினேஷ் ஜோடி 50 பந்துகளில் 95 ரன்கள் குவித்து அசத்தியது. சென்னை அணி தரப்பில் முஸ்தாபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 174 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.
-
Mar 22, 2024 21:12 IST15 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 105/5
15 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 6 ரன்களும், அனுஷ் ராவத் 11 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
-
Mar 22, 2024 20:51 ISTரச்சின் ரவீந்திரா அசத்தல் கேட்ச் : விராட்கோலி அவுட்
12-வது ஓவரை வீசிய முஸ்தாபிசூர் ரஹ்மான் 2-வது பந்தை வீசியபோது சிக்சருக்கு முயற்சித்த விராட்கோலி, ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் அசத்தலான கேட்ச் மூலம் 21 ரன்களில் வெளியேறினார். அதே ஓவரின் 4-வது பந்தில் கேமரூன் கிரீனை வீழ்த்திய முஸ்தாபிசூர் ரஹ்மான் 2-வது முறையாக ஒரே ஓவரில் இரட்டை செக் வைத்துள்ளார்.
-
Mar 22, 2024 20:48 IST10 ஓவர்களில் பெங்களூர் அணி 73/3
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூர் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்தள்ளது. இந்த போட்டியில் 21 ரன்கள் குவித்துள்ள விராட்கோலி சென்னை அணிக்கு எதிராக 1000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
-
Mar 22, 2024 20:35 ISTவந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிய மேக்ஸ்வெல்
4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேக்ஸ்வெல் தீபக் சஹார் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
-
Mar 22, 2024 20:25 ISTரச்சின் ரவீந்திரா அசத்தல் கேட்ச்
5-வது ஓவரை வீச வந்த முஸ்தாபிசூர் ரஹ்மான் 3-வது பந்தில் டூபிளஸி விக்கெட்டை வீழ்த்தினார். ரச்சின் ரவீந்திராவின் அசத்தன் கேச்சின் மூலம் டூபிளசி 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் ரஜத் படிதார் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
-
Mar 22, 2024 20:17 IST3-வது ஓவரில் 4 பவுண்டரிகள்
தீபக் சஹார் வீசிய 3-வது ஓவரில் டூபிளஸி 4 பவுண்டரிகள் அடித்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்துள்ளார். அவர் 17 பந்துகளில் 30 ரன்கள் குவித்துள்ளார்.
-
Mar 22, 2024 20:12 ISTடூபிளஸி அதிரடி ஆட்டம்
2 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 16 ரன்கள் குவித்துள்ளது. விராட்கோலி ஒரு ரன்னுடனும், டூபிளசிஸ் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Mar 22, 2024 20:08 ISTமுதல் ஓவர் முடிவில் பெங்களூர் அணி 7/0
தீபக் சஹார் வீசிய முதல் ஓவரில் பெங்களூர் அணி ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 22, 2024 19:55 ISTபெங்களூர் அணி பேட்டிங்
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ள நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
-
Mar 22, 2024 19:21 ISTஅம்பத்தி ராயுடு இடத்தில் டேரில் மீச்செல்?
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் வலுவான பேட்ஸ்மேனாக இருந்த அம்பத்தி ராயுடு தற்போது ஓய்வு பெற்றுள்ளதால், அவரது இடத்தை நியூசிலாந்து அணியின் டேரல் மீச்செல் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mar 22, 2024 19:19 ISTஆடும் வெலன் அணியில் இடம்பெறுவாரா முஸ்தாபிசுர் ரஹ்மான்?
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக இருந்த பதிரானா,காயம் காரணமாக தொடக்க போட்டிகளை தவறவிடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கைக்கு எதிரான T20I தொடரின் போது காயத்தால் அவதிப்பட்ட பங்களாதேஷின் முஸ்தாபிசுர் ரஹ்மான் பதிரானாவுக்கு மாற்றாக உள்ளார். சென்னையில் அவர் அணியில் சேர்ந்துள்ள நிலையில், ஆடும் வெலன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
Mar 22, 2024 19:16 ISTஅறிமுக வீரராக ரச்சின் ரவீந்திரா
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பையில் 578 ரன்கள் குவித்து அசத்திய நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். இடது கை ஆட்டக்காரரான இவர் வேகப்பந்து வீச்சில் திறமையான வீரர் மட்டுமல்ல, அவர் ஸ்பின்னர்களைப் திறம்பட எதிர்கொள்ளும் திறமை உள்ளவர் என்பதை நிரூபித்துள்ளார்.
-
Mar 22, 2024 17:07 ISTசேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை செப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 64 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 45 போட்டிகளில் வெற்றியும் 18 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. கடைசியாக கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
-
Mar 22, 2024 17:03 ISTவிராட் கோலி முதலிடம்
சென்னை அணிக்கு எதிராக 30 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணியின் விராட்கோலி 985 ரன்கள் குவித்து (அதிகபட்சம் 90) இரு அணிகளுக்கு இடையே அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 740 ரன்கள் குவித்து (28 போட்டி) எம்.எஸ்.தோனி (அதிகபட்சம் 84) 2-வது இடத்தில் உள்ளார். 25 போட்டிகளில் 616 ரன்கள் குவித்து சுரேஷ் ரெய்னா (அதிகபட்சம் 73)3-வது இடத்தில் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 18 விக்கெட்டுகளுடன் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார்
-
Mar 22, 2024 17:00 ISTசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே vs ஆர்.சி.பி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 7 போட்டிகளிலும், பெங்களூர் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
-
Mar 22, 2024 16:56 ISTசி.எஸ்.கே vs ஆர்.சி.பி நேருக்கு நேர் இதுவரை
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 20 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், பெங்களூர் அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.
சென்னை அணி அதிகபட்சமாக பெங்களுரு அணிக்கு எதிராக 226 ரன்களும், சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு அணி 218 ரன்களும் அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்துள்ளன. சென்னை அணி 82 ரன்களுக்கும், பெங்களூர் அணி 70 ரன்களுக்கும் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும்.
-
Mar 22, 2024 16:51 ISTகேப்டன் மாற்றம் குறித்து சூசகமாக சொன்னார் தோனி : ருத்துராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாக நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், கடந்த சீசனில் விளையாடும்போதே தோனி கேப்டன் மாற்றம் குறித்து தன்னிடம் சூசகமாக தெரிவித்தார் என ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.