கேப்டன் மாற்றமும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கை கொடுக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மோசமாகத் தோற்றது கொல்கத்தா.
ஐபிஎஸ் 2020 தொடரின் 32-வது லீக் ஆட்டம் அபு தாபியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் இதில் மோதின.
முன்னதாக கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த இயான் மோர்கன், கொல்கத்தாவின் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 148 ரன்களில் சுருண்டது. பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் அடித்தனர். மீண்டும் அந்த அணியின் பேட்டிங் சொதப்பியது. தினேஷ் கார்த்திக் இதுவரை 7 ஆட்டங்களில் 108 ரன்களே எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
149 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் கொல்கத்தா பந்துவீச்சை திறமையாக சமாளித்தனர். டி காக் அதிரடியில் மிரட்டினார். இந்த ஜோடி 10.3 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் வீழ்ந்தார். டி காக் 25 பந்தில் அரைசதம் கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் சேர்ந்து ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். மும்பை இந்தியன்ஸ் 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி காக் 44 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
உலகக் கோப்பையை வென்ற மோர்கன் தலைமைப் பொறுப்பேற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு மோசமான தோல்வி கிடைத்திருக்கிறது. இதில் இருந்து அணி மீள்கிறதா? என பார்ப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"