Ipl cricket Tamil News: ஐபிஎல் தொடர்களில் மறைக்கவும், மறக்கவும் முடியாத சர்ச்சையாக இன்னும் தொடர்வது 'ஸ்பாட் பிக்சிங்' சர்ச்சை தான். அந்த சர்ச்சையில் சிக்கிய பல உள்ளூர் மட்டும் வெளிநாட்டு வீரர்களுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு, ஐபிஎல் தொடரில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அப்போது இந்த இரு அணிகளுக்கு பதிலாக உருவாக்கப்பட்ட அணிகள் தான் 'ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ்' (ஆர்.பி.எஸ்) மற்றும் 'குஜராத் லயன்ஸ்' அணிகள்.
2016ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் (ஆர்.பி.எஸ்) அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆண்டு நடந்த சீசனில் பெரிதும் சோபிக்க ஆர்.பி.எஸ் அணி லீக் சுற்றோடு வீடு திரும்பியது.
அடுத்த ஆண்டு (2017) நடந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ஆர்.பி.எஸ் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இந்த தொடரில் போட்டி துவங்கிய சில நாட்களிலே தோனிக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக மாற்றப்பட்டார். இருப்பினும் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக இருந்தவர் எம்.எஸ்.தோனி தான் என்று மூத்த வீரரும், முன்னாள் ஆர்.பி.எஸ் அணியின் வீரருமான ரஜத் பாட்டியா கூறியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் டைகரின் நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய பாட்டியா, “நீங்கள் ஒருபோதும் தோனியை ஸ்டீவ் ஸ்மித்துடன் ஒப்பிட முடியாது. ஸ்மித் எனக்கு பிடித்த முதல் 10 கேப்டன்களில் பட்டியலில் கூட இடம்பெறவில்லை. 2017ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வர தோனி தான் காரணம்"என்று கூறியுள்ளார்.
மேலும் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது தான் ஆச்சரியப்பட்டதாக கூறியுள்ள பாட்டியா, 'முக்கியமான சூழ்நிலைகளில் ஸ்மித்திற்கு நல்ல யோசனைகளே கிடைக்காது' என்றுள்ளார்.
இதுவரை 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரஜத் பாட்டியா 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மற்றும் டெல்லி கிரிக்கெட் அணியிலும் விளையாடியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.