2018ம் ஆண்டின் ஐபிஎல் தொடர் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. இன்று மாலை 7 மணிக்கு மும்பையில் நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய 11ம் ஐபிஎல் தொடர் போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்றனர். 20 ஓவர்கள் கொண்ட போட்டியில், பல்வேறு கட்டங்களை தாண்டி சென்னை அணி இறுதிக்கு முன்னேறியது. பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையே நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஹைதராபாத் இன்று நடைபெற இருக்கும் இறுதி போட்டிக்கு தேர்வானது.
இரண்டு ஆண்டுக் கால தடைக்குப் பின்னர் மீண்டும் களத்தில் இறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமையில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் அணியில் பந்து வீச்சாளர்கள் தங்கள் திறமையைப் பெரிதாக நிரூபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் தங்களுக்கே உரியக் கைவசத்தை காட்டி ரன்களை வெளுத்து வாங்கியது சென்னை அணி.
முன்னதாக நடைபெற்ற லீக் போட்டியில், 2 முறை ஹைதராபாத் அணியுடன் சென்னை அணி மோதியுள்ளது. எனவே ஹைதராபாத்தின் பலம், பலவீனத்தை நன்கு அறிந்து இந்த முறையும் சென்னை அணி அவர்களை ஒரு கை பார்க்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.