IPL Mega Auction 2022 Tamil News:15-வது ஐ.பி.எல். (ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடக்கிறது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. மேலும், இந்த மெகா ஏலத்தில் புதிய அணிகள் தேர்வு செய்த மற்றும் தக்கவைக்கப்பட்ட மொத்தம் 33 வீரர்களை தவிர்த்து, மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் 228 வீரர்கள் சர்வேதச அளவில் நடைபெற்ற போட்டிகளில் அந்நாட்டு அணிக்காக களமிறங்கியவர்கள் (கேப்டு ப்ளேயேர்ஸ்). 355 வீரர்கள் சர்வேதச அளவில் நடைபெற்ற போட்டிகளில் அந்நாட்டு அணிக்காக விளையாடாதவர்கள் (அன்- கேப்டு ப்ளேயேர்ஸ்) ஆவர்.
போட்டி நிச்சயம்
ஐ.பி.எல். தொடரில் 'மெகா ஏலம்' என்பது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்படி, அந்தந்த அணிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டு, செயல்படாத வீரர்கள் வெளியேற்றப்பட்டு புதிய வீரர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இம்முறை 2 புதிய அணிகள் இணைந்துள்ள நிலையில், ஏற்கெனவே இருக்கும் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும், அப்படி தக்க வைக்கப்படும் வீரர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி ஏற்கெனவே உள்ள 8 அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான முக்கிய வீரர்களை தக்கவைத்துக்கொண்டது. அவர்களது விபரங்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையும் வெளியிட்டு இருக்கின்றன.
தற்போது நடைபெற இருக்கிற மெகா ஏலத்தில் ஏற்கனவே உள்ள அணியை ஒரு வலுவான அணியாக கட்டமைக்க ஒவ்வொரு அணியும் அந்த அணிக்கு தேவையான வீரர்களை போட்டிபோட்டு வாங்க முயலும். இதேபோல், அந்த அணி தக்க வைக்க தவறிய வீரர்களை மீண்டும் அணியில் இணைக்க ஏலத்தில் முடிந்தவரை போராடும். எனவே, அதற்கேற்ப ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு திட்டத்துடன் ஏலத்தில் களம் காணும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக்கொண்ட அணி விபரம்
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பல ஆண்டுகளாக இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வருகிறது. இதற்கு காரணம், அவர்கள் தங்கள் முக்கிய வீரர்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே ஆகும். மேலும், அந்த அணி இதுவரை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்த 'அணியின் கோர்' பல ஆண்டுகளாக அணிக்கு சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளார்கள்.
அந்த வகையில் சென்னை அணி இம்முறை, அடுத்த மூன்று ஐபிஎல் சீசன்களுக்கு தங்கள் நீண்ட கால கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. தோனியைத் தவிர (ரூ. 12 கோடி), அணியின் வெற்றிக்காக முக்கியப் பங்கு வகித்த ஆல்-ரவுண்டர் இரட்டையர்களான ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) ஆகியோரைத் தக்கவைத்துள்ளது.
கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை அணியின் கையிருப்பு (Purse Balance) தற்போது 48 கோடி ரூபாய் ஆக உள்ளது. இந்த மெகா ஏலத்தில் முடிந்தவரை அணியின் வெற்றிக்கு உழைத்த வீரர்களை தக்கவைக்க அணி நிர்வாகம் முயற்சி எடுக்கும் என சென்னை அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் குறிப்பிட்டு இருந்தார்.
அவ்வகையில், சென்னை அணி ஏலத்தில் எடுக்க நிச்சயம் முயற்சிக்கும் 5 வீரர்கள் இப்போது குறித்து பார்க்கலாம்.
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (அடிப்படை விலை: ரூ 2 கோடி):
இந்த பட்டியலில் சென்னை அணி கடுமையாக முயற்சி மேற்கொள்ளும் வீரர்களில் ஒருவராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் இருப்பார். ஏனென்றால், சென்னை அணியின் வெற்றியில் அவரின் பங்கு அளப்பரியது. கடந்த சீசனில் அவர் 633 ரன்கள் வரை குவித்து, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது வீரராக இருந்தார். அவருக்கும் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய சென்னையின் ருதுராஜ் கெய்க்வாட்-க்கும் இடையே உள்ள ரன்கள் வித்தியாசம் வெறும் 2 ரன்கள் மட்டுமே.
தவிர, இதுவரை 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டு பிளெசிஸ் 2935 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் விளாசிய 22 அரை சதங்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் சராசரி 131.08 ஆக உள்ளது.
தீபக் சாஹர் (அடிப்படை விலை: ரூ. 2 கோடி):
தீபக் சாஹர் 2018 ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக 12 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரின் இந்த சிறப்பான பந்துவீச்சு அவருக்கு இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பை வழங்கியது. மேலும், அவர் 63 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தி எம்எஸ் தோனியின் நம்பிக்கையை பெற்ற வீரர்களுள் ஒருவராக இருக்கிறார்.
டுவைன் பிராவோ (அடிப்படை விலை: ரூ. 2 கோடி):
முதல் மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது திறமையை வெளிப்படுத்திய பிராவோ, 2011 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக சென்னை அணியால் வாங்கப்பட்டர். தற்போது சென்னை அணியின் ஓர் அங்கமாக மாறிப்போயுள்ள இந்த ஆல்ரவுண்டர் வீரர், 151 ஐபிஎல் போட்டிகளில் 167 விக்கெட்டுகளையும், 1537 ரன்களையும் எடுத்துள்ளார்.
ஷர்துல் தாக்கூர் (அடிப்படை விலை: ரூ. 2 கோடி):
‘லார்டு’ தாக்கூர் என்கிற அந்தஸ்தை அடைந்துள்ள ஷர்துல் தாகூரை சென்னை அணி மீண்டும் அணியில் இணைக்க தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. அயல்நாட்டு தொடரிகளில் அவர் செயல்பட்ட விதம், பெரும்பாலான அணிகளை ஈர்க்கும் வகையில் அமைத்துள்ளது.
தான் ஒரு ஆல்ரவுண்டர் வீரராக விளையாட எப்போதும் தயங்குவதில்லை என தன்னை நிரூபித்துள்ள தாக்கூர், 61 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா (அடிப்படை விலை: ரூ. 2 கோடி):
‘சின்ன தல’ என சென்னை அணியின் ரசிகர்களால் 'அன்புடன்' அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, மிஸ்டர் ஐபிஎல் என்று குறிப்பிட்டால் நிச்சயம் மிகையாகாது. இதுவரை 205 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5,528 ரன்கள் குவித்து வெற்றிகரமான பேட்டர்களில் ஒருவராக திகழ்கிறார்.
சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தாலும், சென்னை அணி அவரை குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறது. அவரின் செய்லபாடுகள் மற்றும் அனுபவத்திற்காகவே அவரை அந்த அணி மீண்டும் அணியில் இணைக்க முயலும்.
மும்பை வாங்க கடுமையாக முயற்சிக்கும் 5 வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் (MI) போன்ற ஒரு அணிக்கு 'அணியின் கோர்' பல ஆண்டுகளாக அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி சமீபத்திய ஆண்டுகளில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஆதிக்கம் செலுத்தி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் ரோகி த் சர்மா (16 கோடி) உட்பட ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்ட் (6 கோடி) ஆகிய 4 வீரர்களை தக்கவைத்துள்ளது.
தற்போது நடக்கும் மெகா ஏலத்தில் அந்த அணியின் முதல் பார்வை விக்கெட் கீப்பர்-பேட்டர் பக்கம் தான் இருக்கும். அதற்காக அந்த அணி குயின்டன் டி காக் மற்றும் இஷான் கிஷனை மீண்டும் அணியில் கொண்டு வர அதிக கவனம் செலுத்தும்.
மேலும், மும்பை அணி தக்க வைக்க தவறிய முக்கிய வீரர்களுள் ஒருவரான வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் வசம் மீண்டும் பார்வையை திருப்பும். அந்த அணிக்காக கடந்த சில சீசன்களில் ட்ரென்ட் போல்ட் அளப்பரிய பங்களித்துள்ளார். இதேபோல், லெக்-ஸ்பின்னர் ராகுல் சாஹரையும் வசப்படுத்தவும் அந்த அணி முயலும்.
மற்றொரு சுழற்பந்து வீச்சாளருக்கு அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஷ்வினை வாங்க மும்பை அணி முயற்சி மேற்கொள்ளலாம். இந்திய ஆடுகளங்களில் அவர் தனது சுழலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.
ட்ரென்ட் போல்ட் (அடிப்படை விலை: ரூ. 2 கோடி):
நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் போல் 'திறன் மிகுந்த' வீரர்கள் ஒரு சிலரே இருக்கின்றனர். அவரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும், சீம் செய்ய முடியும் மேலும் துல்லியமாக வீசி மிரட்ட முடியும். அவரது வேகம் பல பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்கும். அவரின் ஸ்விங் பந்துகள் வேலை செய்யாதபோது அவரது மிகத்துல்லியமாக பந்துவீச்சு பேட்மேன்களை நிலைகுலையைச் செய்யும்.
நியூசிலாந்து அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வரும் போல்ட் இதுவரை 62 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை மும்பை அணி வசப்படுத்தும் பட்சத்தில் ஜஸ்பிரித் பும்ராவுடன் மீண்டும் இணைந்து பயமுறுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
இஷான் கிஷான் (அடிப்படை விலை: ரூ. 2 கோடி):
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷானை மும்பை அணி திரும்ப பெற கடுமையாக முயற்சிக்கும். அந்த அணிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் இவர், இதுவரை 61 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,452 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 9 அரைசதங்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 136.33 ஆக உள்ளது.
ராகுல் சாஹர் (அடிப்படை விலை: ரூ. 75 லட்சம்):
ராகுல் சாஹருக்கு நம்பிக்கையூட்டி வளர்த்து வரும் மும்பை அணி, அந்த அணி 2019-ல் விளையாடிய 16 போட்டிகளில் 13 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கியது. தன்னிடம் திறமைக்கு பஞ்சமில்லை என்று கூறும் இந்த இளம் லெக்-ஸ்பின்னர், தன் மீது அணி வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் கடந்த சீசன்களில் தன்னை நிரூபித்துள்ளார்.
2020 சீசனில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாஹர், கடந்த சீசனில் 11 ஆட்டங்களில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பவர்பிளேயில் அவரை பயன்படுத்திய கேப்டன் ரோகித்து, அந்த கடினமான வேலையை தன்னால் செய்ய முடியும் என்பதை நிரூபித்தும் இருந்தார்
ஆர் அஷ்வின் (அடிப்படை விலை: ரூ. 2 கோடி):
டெஸ்ட் கிரிக்கெட் (சிவப்பு பந்து) மற்றும் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தனி முத்திரை பதித்தவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய அணிக்கான ஒருநாள் மற்றும் டி-20 அணியில் கடந்த ஆண்டுகளாக அவர் இடம்பெறவில்லை என்றாலும் அவரின் வீரியம் இன்னும் குறையவில்லை என்றே கூறலாம். அதை சமீபத்தில் நடந்த தொடரிகளில் வெளிப்படுத்தி இருந்தார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் 167 போட்டிகளில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் அனுபவத்தையும், திறனையும் பயன்படுத்த மும்பை அணி முயற்சிக்கும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ராஜ் அங்கத் பாவா (அடிப்படை விலை: ரூ. 20 லட்சம்):
மும்பை அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், மும்பை அணியில் ஆல்ரவுண்டர் வீரருக்கான இடம் காலியாக உள்ளது. எனவே, அந்த இடத்திற்கு இளம் வீரர் ராஜ் அங்கத் பாவா பொருத்தமானவராக இருக்க வாய்ப்புள்ளது.
U-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஆல்ரவுண்டர் வீரர் 'ராஜ் அங்கத் பாவா' மிகச்சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடரில் அவரது சிறப்பான பந்துவீச்சால் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதில் அவர் இறுதிப்போட்டியில் வீழ்த்திய 5 விக்கெட்டுகளும் அடங்கும்.
பேட்டிங்கில் 245 ரன்களை குவித்த இவர், உகாண்டாவுக்கு எதிராக ஆட்டத்தில் 108 பந்துகளில் 162 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2004ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக ஷிகர் தவானின் 155 ரன்களே யு-19 உலகக் கோப்பையில் ஒரு இந்தியரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதனை இந்த இளம் வீரர் முறியடித்து இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.