16-வது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. மொத்தம் 87 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் 273 பேர், வெளிநாட்டு வீரர்கள் 132 பேர் என மொத்தம் 405 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். இளம் மற்றும் முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. வீரர்களுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் குறித்து பார்ப்போம். ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து வீரர் சாம் கரண் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரின் அடிப்படை விலை ரூ.2 கோடி என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி 18.5 கோடிக்கு வாங்கியது. மும்பை அணி ரூ.18 கோடி தர முன் வந்த நிலையில், பஞ்சாப் அணி 18.5 கோடி என விலையை இறுதி செய்து வாங்கியது. இவர் முன்பு சென்னை அணிக்கு விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக மும்பை அணி கேமரூன் க்ரீனை ரூ. 17.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது இரண்டாவது அதிகபட்ச ஏலத் தொகையாகும். ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை வாங்க பெங்களூரு, ராஜஸ்தான், லக்னோ இடையே போட்டி இருந்தது. இறுதியாக சென்னை அணி ரூ.16.25 கோடிக்கு ஸ்டோக்ஸை தட்டிச் சென்றது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் லக்னோ அணிக்கு விளையாட உள்ளார். ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்படார். ஹேரி ப்ரூக் ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஐதராபாத் அணிக்கு விளையாடுகிறார். மயங்க அகர்வால் ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஐதராபாத் அணிக்கு விளையாட உள்ளார். ஷிவம் மாவியை குஜராத் அணி ரூ.6 கோடிக்கு வாங்கியது. ஜேசன் ஹோல்டரை ரூ. 5.75 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. டெல்லி அணி ரூ.5.5 கோடிக்கு முகேஷ் குமாரை ஏலம் எடுத்தது. ஐதராபாத் அணி ஹென்ரிச் க்ளொசெனை ரூ. 5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/