Global Chess League 2023 Tamil News: முதலாவது குளோபல் செஸ் லீக் போட்டிகள் இன்று (ஜூன் 21ம் தேதி) முதல் ஜூலை 2ம் தேதி வரை துபாய் செஸ் மற்றும் கலாச்சார கிளப்பில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் எஸ்.ஜி ஆல்பைன் வாரியர்ஸ், கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ், திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், பாலன் அலாஸ்கன் நைட்ஸ், அப்கிரேடு மும்பா மாஸ்டர்ஸ், சிங்காரி கல்ஃப் டைட்டன்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் களமாடுகின்றன. இந்த அணிகளில் 36 கிராண்ட்மாஸ்டர்கள் களமாடுகின்றனர்.
எஸ்ஜி ஸ்போர்ட்ஸ்-க்கு சொந்தமான எஸ்.ஜி ஆல்பைன் வாரியர்ஸ் அணியில் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ் டி, பிரக்ஞானந்தா ஆர் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் உள்ளனர். இந்த மூவருடன் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனனும் இணைந்து ஐகான் வீரராக அணியை வழிநடத்துகிறார். இரினா க்ருஷ் மற்றும் எலிசபெத் பாட்ஸ் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இதேபோல், ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணியை ஐகான் வீரராக வழிநடத்துகிறார். இன்சுர்கோட் ஸ்போர்ட்ஸ்-க்கு சொந்தமான அணியில் ரிச்சர்ட் ராப்போர்ட், சீனாவின் ஹூ யிஃபான், லீனியர் டொமிங்குஸ் பெரெஸ், பெல்லா கோட்டனாஷ்விலி மற்றும் ஆண்ட்ரி எசிபென்கோ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
திரிவேணி இன்ஜினியரிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சொந்தமான திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் அணி புதிதாக மகுடம் சூடிய டிங் லிரனை வசப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் புனித் பாலன் குழுமத்திற்கு சொந்தமான பாலன் அலாஸ்கன் நைட்ஸ் அணி இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீன கிராண்ட்மாஸ்டரிடம் தோல்வியடைந்த இயன் நெபோம்னியாச்சியை தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்கிடையில், யு ஸ்போர்ட்ஸுக்கு சொந்தமான அப்கிரேட் மும்பா மாஸ்டர்ஸ் அணி மாக்சிம் வச்சியர்-லாக்ரேவை ஐகான் பிளேயராக தேர்ந்தெடுத்துள்ளது. அதே நேரத்தில் மூன்று இந்தியர்கள் – விடித் குஜராத்தி, கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லி ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். சிங்காரி ஆப் நிறுவனத்திற்கு சொந்தமான சிங்காரி கல்ஃப் டைட்டன்ஸ் அணி ஜான்-கிரிஸ்டோஃப் டுடாவை தங்கள் ஐகான் பிளேயராக தேர்வு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.