IPL 2021, BCCI News in tamil: இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி துவங்கிய 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2 அலை காரணமாக ஒத்திவைக்கிப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்த தொடரில் அதன் எஞ்சியுள்ள 31 ஆட்டங்களையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் கடைசி கட்ட இரண்டு லீக் ஆட்டங்கள் வருகிற 8-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் நடைபெறும் என ஏற்கனவே அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், போட்டி நேரத்தில் மாற்றத்தை கொண்டுவந்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அவ்விரு ஆட்டங்களும் ஒரே நேரத்தில் அதாவது இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி அன்றைய தினம் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (அபுதாபி), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் (துபாய்) ஆகிய அணிகள் மோதும் ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடக்க இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி நேரத்தில் மாற்றம் செய்தது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "எப்போதுமே கடைசி நாள் லீக் ஆட்டங்கள் சில அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பை தீர்மானிக்கும். மாலையில் ஒரு ஆட்டம் நடக்கும் போது அதன் முடிவு, ரன்ரேட்டுக்கு ஏற்ப இரவில் 2-வது ஆட்டத்தில் விளையாடும் அணிகள் செயல்படும். எந்த ஒரு அணியும் இது போன்ற சாதகமான அம்சத்தை பெறக்கூடாது என்பதற்காக கடைசி இரு லீக்கையும் ஒரே நேரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு ஐ.பி.எல்-ல் சேர்க்கப்பட உள்ள புதிய இரு அணிகள் எவை? என்பது குறித்து அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil