IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை அகமதாபாத்தில் நடந்த ஆட்டம் அங்கு பொழிந்த கனமழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட்டது.
7.30 மணிக்கு தொடக்கவேண்டிய ஆட்டம் கடைசிவரை தொங்கப்படாத நிலையில், இந்த ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன. இந்த போட்டி கைவிடப்பட்டதன் காரணமாக, குஜராத் டைட்டன்ஸ் நடப்பு சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 3-வது அணியாக வெளியேறியது.
ஐ.பி.எல் 2024 லீக் சுற்றில் இன்னும் 7 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பிளே-ஆஃப்க்கு ஒரே ஒரு அணி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) மட்டுமே அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. பிளே-ஆஃப் ரேஸில் இன்னும் 6 அணிகள் உள்ளன. அதேநேரத்தில், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL playoff scenarios explained after GT’s elimination
இந்நிலையில், நடப்பு சீசனில் பிளே-ஆஃப்க்கு முன்னேற, போட்டா போட்டியில் இருக்கும் 6 அணிகளில் ஒவ்வொன்றும் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கு பார்க்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்)
விளையாடிய போட்டிகள்: 12, புள்ளிகள்: 16, நெட் ரன்ரேட்: 0.349 | மீதமுள்ள போட்டிகள்: பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான மீதமுள்ள 2 போட்டிகள் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.
தற்போது ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது. மற்ற மூன்று அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மீதமுள்ள ஒருபோட்டியில் வென்று முறையே 16 புள்ளிகளை பெறலாம். ஐதராபாத் அணிக்கு மட்டும் மீதம் 2 போட்டிகள் உள்ள சூழலில் அந்த அணி 18 புள்ளிகளை எட்டலாம்.
தற்போது வரை ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப்க்குள் நுழையும் மிகவும் சிறந்த நிலையில் இருக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை நடக்கும் போட்டியில் டெல்லி அணியிடம் லக்னோ தோற்றால், ராஜஸ்தான் அணி தகுதி பெறும். ஆனால் லக்னோ அணி வெற்றி பெற்றால், ராஜஸ்தான் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் நிச்சயம் வெல்ல வேண்டும். 2 போட்டியிலும் வென்றால், அது அவர்களுக்கு முதல்-இரண்டு இடத்தில் இடம் பிடிக்க உதவும். மேலும், அவர்கள் ஒன்றில் வெற்றி பெற்றாலும், ஐதராபாத் அணிக்கு மேல் நெட் ரன்ரேட்டை பெற்றிருந்தாலும், அவர்கள் முதல் இரண்டு இடங்களைப் பெறுவார்கள்.
ராஜஸ்தான் தனது இரண்டு போட்டிகளிலும் தோற்றாலும், அவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க வாய்ப்புள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவர்களின் நெட் ரன்ரேட் -0.769 ஆக இருப்பதால், கணிசமான சவாலை எதிர்கொள்கிறது. மீதமுள்ள போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றாலும், அவர்களின் நெட் ரன்ரேட்டை மேம்படுத்தவும், ராஜஸ்தானை (0.349) கடந்து செல்லவும் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படும். ஆயினும்கூட, ராஜஸ்தான் மனநிறைவுடன் இருக்க முடியாது மற்றும் இரண்டு போட்டிகளிலும் வெற்றிகளைப் பெறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே)
விளையாடிய போட்டிகள்: 13, புள்ளிகள்: 14, நெட் ரன்ரேட்: 0.528 | மீதமுள்ள போட்டி: ஆர்.சி.பி
சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகள் மற்றும் 0.528 என்கிற நெட் ரன் ரேட்டைப் பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான அவர்களின் கடைசி ஆட்டம், மே 18 அன்று பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில், சென்னை அணி வலுவான நெட் ரன்ரேட்டுடன் ஆர்.சி.பி-யை வெற்றி பெற்றால் பிளே ஆஃப்க்குள் நுழைந்துவிடும்.
இருப்பினும், ஆர்.சி.பி-க்கு எதிராக சென்னை அணி வெற்றி பெறத் தவறினால், அவர்கள் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அல்லது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்து, 16 புள்ளிகளுக்குக் கீழே தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
கூடுதலாக சென்னை அணி தோல்வியுற்றால், நெட் ரன்ரேட் அடிப்படையில் ஆர்.சி.பி-க்கு மேல் தங்களை தக்கவைக்க அவர்களின் தோல்வியின் போது நெட் ரன்ரேட் அடிவாங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், ஐதராபாத் அல்லது லக்னோ ஆகிய இரண்டும் 14 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகளுடன் முடிவடைந்தால், சென்னை மற்றும் ஆர்.சி.பி ஆகிய இரண்டும் தலா 14 புள்ளிகளுடன் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (எஸ்.ஆர்.எச்)
விளையாடிய போட்டிகள்: 12, புள்ளிகள்: 14, நெட் ரன்ரேட்: 0.406 | மீதமுள்ள போட்டிகள்: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்
ஐதராபாத் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக மீதமுள்ள இரண்டு போட்டிகள் உள்ளன. இவை இரண்டும் மே 16 மற்றும் 19 ஆம் தேதிகளில் அந்த அணியின் சொந்த மைதானமான ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
தற்போதைய நிலையில், பிளேஆஃப்க்கு தகுதி பெற ஐதராபாத் அணி இந்த போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. லக்னோ அணியுடன் ஒப்பிடும் போது ஐதராபாத் அணியின் சிறப்பான நெட் ரன்ரேட் அவர்களுக்கு கணிசமான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் அவர்களின் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டும் பெறுவது ஐ.பி.எல் பிளேஆஃப்க்கு அவர்களின் தகுதியை உறுதிப்படுத்த போதுமானதாக இருக்க வேண்டும்.
இரண்டு வெற்றிகள் ஐதராபாத் அணியை புள்ளிகள் பட்டியலில் முதல்-இரண்டு இடங்களுக்குள் முடிக்க உதவக்கூடும். இருப்பினும், அவர்கள் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றால், அவர்களின் பிளேஆஃப் வாய்ப்புக்கு பின்னடைவு ஏற்படலாம். சென்னை, பெங்களூரு அணிகள் இரண்டும் நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிகளில் முன்னேறலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி)
விளையாடிய போட்டிகள்: 13, புள்ளிகள்: 12, நெட் ரன்ரேட்: 0.387 | மீதமுள்ள போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஆர்.சி.பி-க்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. இப்போட்டி வருகிற மே 18 ஆம் தேதி பெங்களூரு அணியின் சொந்த மைதானமான எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி ஆர்.சி.பி-க்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியாகும். இதில் அவர்கள் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். அவர்கள் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது தோற்க வேண்டும் என்று நினைப்பார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், அவர்கள் சென்னை அணியை (0.528) நல்ல நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்கடிக்க போராடுவார்கள்.
மற்ற அணிகளின் முடிவுகள் தங்கள் வழியில் சென்றால், சென்னை அணியை விட சிறந்த நெட் ரன்ரேட்டுடன் ஆர்.சி.பி ஐ.பி.எல் பிளே-ஆஃப்க்கு தகுதி பெறுவதற்கான நல்ல வாய்ப்பாக அமையும்.
டெல்லி கேபிடல்ஸ் (டி.சி)
விளையாடிய போட்டிகள்: 13, புள்ளிகள்: 12, நெட் ரன்ரேட்: -0.482 | மீதமுள்ள போட்டி: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
டெல்லி அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. இப்போட்டியானது இன்று செவ்வாய்கிழமை டெல்லியின் சொந்த மைதானமான அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. டெல்லி நினைப்பதெல்லாம் ஐதராபாத் மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோற்க்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். மேலும், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும். அத்துடன் லக்னோ அணி மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று டெல்லியை விட நெட் ரன்ரேட்டில் முந்தாமல் இருக்க வேண்டும்.
பல கடினமான மற்றும் சிக்கலான வரிசைமாற்றங்கள், சேர்க்கைகள் மற்றும் கணக்கீடுகளைச் சார்ந்திருப்பதால், டெல்லி அணியின் பிளே - ஆஃப் வாய்ப்புகள் மங்கலகவே தெரிகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி)
விளையாடிய போட்டிகள்: 12, புள்ளிகள்: 12, நெட் ரன்ரேட்: -0.769 | மீதமுள்ள போட்டிகள்: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மீதமுள்ள இரண்டு போட்டிகள் உள்ளன. இவை இரண்டும் மே 14 மற்றும் 17 ஆம் தேதிகளில் டெல்லியின் அருண் ஜெட்லி ஸ்டேடியம் மற்றும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.
லக்னோ அணியின் குறைந்த நெட் ரன்ரேட் அவர்களை ஒரு சவாலான நிலையில் வைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 16 புள்ளிகளை எட்டிய பிறகும், அவர்கள் இன்னும் சிறப்பான நெட் ரன்ரேட்டைக் கொண்ட சென்னை மற்றும் ஐதராபாத் அணியை விட பின்தங்கியிருப்பதைக் காணலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடையும் சூழ்நிலையில் கூட, ரன் ரேட் அடிப்படையில் லக்னோ அவர்களை மிஞ்சும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதன் விளைவாக, பிளேஆஃப்க்கு லக்னோ தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.