IPL 2024 playoff scenarios: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆட்டங்கள் நடைபெற்றன. பிற்பகல் 3:30 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது. இந்த சிறப்பான வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. இதுவரை அந்த அணி ஆடிய 11 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளுடனும், +1.453 நெட் ரன்ரேட்டுடனும் வலுவான நிலையில் இருக்கிறது. 10 போட்டிகளில் 8ல் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அதே 16 புள்ளிகளை பெற்று இருந்தாலும், அந்த அணியின் நெட் ரன்ரேட் +0.622 ஆக உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL playoff scenarios
கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றான பிளே - ஆஃப்க்கு தங்கள் இடங்களை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு, அதாவது 3வது மற்றும் 4வது இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த 3 அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முறையே 3, 4, மற்றும் 5வது இடங்களில் உள்ளன.
இந்த 3 அணிகளில் ஐதராபாத் அணி சென்னை மற்றும் லக்னோ அணிகளை விட ஒரு போட்டி குறைவாக ஆடியுள்ளது. சென்னை மற்றும் லக்னோ தலா 11 போட்டிகளிலும், ஐதராபாத் 10 போட்டியிலும் விளையாடியுள்ளன. மும்பையில் இன்று திங்கள்கிழமை நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமாடுகிறது. இதில் வெற்றியை ருசிக்கும் பட்சத்தில், சென்னை மற்றும் லக்னோ அணிகளை முந்தி விடும். அதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற ஐதராபாத் அணியினர் தீவிரம் காட்டுவார்கள்.
இந்த அணிகளைத் தொடர்ந்து, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பிளே - ஆஃப் ரேஸில் இன்னும் நீடிக்கிறது. 11 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதேபோல், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தொடரில் இன்னும் உயிப்புடன் இருக்கிறது. அந்த அணி ஆடிய 11 போட்டிகளில் 4ல் வெற்றி 7ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் டெல்லிக்கு அடுத்தபடியாக புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
பெங்களூரு அணி கடைசியாக நடந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், இந்த சீசனில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பிளே - ஆஃப் சுற்றுக்கு அவர்கள் முன்னேற மீதமுள்ள ஆட்டங்களில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், அவர்கள் 14 புள்ளிகளுடன் முடிப்பார்கள். மற்ற அணிகளின் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தால், நெட் ரன்ரேட்டை பொருட்படுத்தமால் முதல் 4 இடங்களுக்குள் அவர்களால் முடிக்க முடியும்.
8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி சென்னையிடம் தோல்வி பெற்றதன் மூலம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இனி அவர்கள் கையில் இல்லை.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே 9-வது மற்றும் 10-வது இடத்தில் இருப்பதால், அவர்களின் பிளே - ஆஃப் சுற்று கனவு கிட்டத்தட்ட நொறுங்கி விட்டது எனலாம். குஜராத் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால், அவர்கள் 14 புள்ளிகளை எட்டுவார்கள். இதேபோல், 11 போட்டிகளில் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், 3 போட்டியில் வென்றால் 12 புள்ளிகளுடன் முடிப்பார்கள். இந்த இரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக போராடுவார்கள். அது சில அணிகளுக்கு பிளே - ஆஃப் கதவுகளை திறக்கும், தோல்வி பெற்றால் பட்டியலில் கடைசில் இடங்களில் இருந்தவாறு தொடரை முடிப்பார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/fbe8d8279d30901bafc6ef0fde8a2fdf00d53c4ff28bfdffe56a527b72db6dcb.png)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“