IPL 2024 :17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது.
நேற்று கடைசியாக நடந்த லீக் ஆட்டங்களில், பிற்பகல் 3:30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் ஐதராபாத்திலும், இரவு 7:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கவுகாத்தியிலும் மோதிக்கொண்டன. இதில், ஐதராபாத் பஞ்சாப் அணியை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஐதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. 3வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் (+0.273) லீக் சுற்று முடிவில் 17 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ஐதராபாத் +0.414 என்கிற கூடுதலான நெட் ரன்ரேட்டை பெற்று இருப்பதால் ராஜஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.
இதன் அடிப்படையில், நாளை செவ்வாய்க்கிழமை (மே 21) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் (குவாலிஃபையர் 1) சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் முதல் இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.
இதனைத் தொடர்ந்து, அதே மைதானத்தில் நாளை மறுநாள் புதன்கிழமை (மே 22) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் 4வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
குவாலிஃபையர் ஒன்றில் வெற்றி பெறும் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 26 ஆம் தேதி) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் செல்லும். தோல்வியடைந்த அணி வருகிற வெள்ளிக்கிழமை (மே 24 ஆம் தேதி) எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். அதாவது, 2வது தகுதிச் சுற்றில் (குவாலிஃபையர் 1) ஆடும். இதில் வெற்றியை ருசிக்கும் அணி இறுதிப்போட்டிக்குள் 2வது அணியாக நுழையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“