CSK vs MI, or CSK vs GT again in final? IPL Playoffs history Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தற்போது சென்னை அணி வீரர்கள் இந்த இறுதிப்போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இன்று அகமதாபாத்தில் நடக்கும் குவாலிபையர்-2 வெற்றியை ருசிக்கும் அணியை சென்னை அணி வருகிற ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும்.
சி.எஸ்.கே-வுக்கு கோப்பை லக்?
இந்நிலையில், ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. அதாவது, 12 ஆண்டு கால பிளேஆஃப் வரலாற்றில், குவாலிஃபையர் 1ல் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டியில் களமாடிய அணியே அதிக முறை (12 சீசன்களில் 9 முறை) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அவ்வகையில், சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 3 முறை இந்த சாதனையை எட்டியுள்ளன. 2011, 2018, 2021ல் சென்னை அணியும், 2015, 2019 மற்றும் 2020ல் மும்பை அணியும் குவாலிஃபையர் 1ல் வெற்றியை ருசித்தது சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டன. இதேபோல், 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் (2012 மற்றும் 2014) அதே வழியில் தான் வெற்றி பெற்றது. மேலும், நடப்பு சாம்பியனான குஜராத் அணியும் கடந்த சீசனில் இந்த வழியில் தான் வெற்றி பெற்றது.
⦿ 2011 - இறுதிப் போட்டி: சென்னை 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது. குவாலிஃபையர் 1 - சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
⦿ 2012 - இறுதிப் போட்டி: கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது. குவாலிஃபையர் 1 - கொல்கத்தா 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
⦿ 2014 - இறுதிப் போட்டி: கொல்கத்தா 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வென்றது. குவாலிஃபையர் 1 - கொல்கத்தா 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வென்றது.
⦿ 2015 - இறுதிப் போட்டி: மும்பை 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது. குவாலிஃபையர் 1 - மும்பை 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.
⦿ 2018 - இறுதிப் போட்டி: சென்னை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது. குவாலிஃபையர் 1 - சென்னை 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
⦿ 2019 - இறுதிப் போட்டி: மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது. குவாலிஃபையர் 1 - மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.
⦿ 2020 - இறுதிப் போட்டி: மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது. குவாலிஃபையர் 1 - மும்பை 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது.
⦿ 2021 - இறுதிப் போட்டி: சென்னை 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது. குவாலிபையர் 1 - சென்னை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
⦿ 2022 - இறுதிப் போட்டி: குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது. குவாலிஃபையர் 1 - குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.
இறுதிப் போட்டியில் சென்னை - குஜராத் மோதல்?
சென்னை அணி குவாலிஃபையர் 1ல் குஜராத் அணியை தோற்கடித்துள்ளது. அதனால், இறுதிப்போட்டியில் குஜராத் அணியை சென்னை அணி மீண்டும் சந்திக்கலாம். ஐபிஎல்லின் கடந்த 12 பதிப்புகளில், குவாலிஃபையர் 1ல் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் 9 முறை (2011, 2013, 2014, 2015, 2017, 2018, 2019, 2020, 2022) இறுதிப் போட்டியில் மீண்டும் சந்தித்துள்ளன.
இறுதிப் போட்டியில் சென்னை குஜராத் அணியை சந்திக்கும் பட்சத்தில், குவாலிஃபையர் 1ல் வெற்றியாளர், ஒன்பதில் 7 முறை அதே அணியை இறுதிப் போட்டியில் தோற்கடித்திருப்பதால், சென்னைக்கு வெற்றி முகம் உள்ளது. சென்னை அணி தனது குவாலிஃபையர் 1ல் சந்தித்த அணியை மீண்டும் இறுதிப் போட்டியில் 5 முறை சந்தித்துள்ளது. அதில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. குவாலிஃபையர் 1ல் தோல்வியடைந்த அணியை வீழ்த்தி பட்டத்தை வென்ற ஒரே அணியாக மும்பை அணி உள்ளது.
5 முறை சாம்பியனான மும்பை அணி 2013ல் நடந்த குவாலிஃபையர் 1ல் தோற்று, சென்னையை இறுதிப் போட்டியில் தோற்கடித்து முதல் பட்டத்தை வென்றது. அதேபோல், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 2017ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியிடம் குவாலிஃபையர் 1ல் தோற்று, இறுதிப் போட்டியில் அதே அணியை வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.