16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கிய 45வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
சி.எஸ்.கே வாய்ப்பை தட்டிப் பறித்த மழை
இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுதலின் மழை காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து இருந்த தருணத்தில் மழை மீண்டும் குறுக்கிட்டது. லக்னோ அணியில் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்த ஆயுஷ் படோனி கடைசி வரை களத்தில் இருந்தார்.
மிதமான மழை கனமழையாக பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனால், சென்னை – லக்னோ அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்த ஒரு புள்ளி மூலம் சென்னை அணி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2வது இடத்தில் உள்ள லக்னோ அணியின் நெட் ரன்ரேட் +0.639 ஆக உள்ளது. சென்னையின் நெட் ரன்ரேட் +0.329 ஆக உள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றியை ருசித்திருந்தால் அணி 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கும்.
10 புள்ளிகளுடனும், +0.800 நெட் ரன்ரேடுடனும் ராஜஸ்தான் அணி 4வது இடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடனும், +0.532 ரன்ரேடுடனும் குஜராத் முதல் இடத்தில் உள்ளது.
ஆரஞ்சு கேப்
பேட்டிங் செய்யாத போதிலும், ஆரஞ்சு கேப் தரவரிசையில் டெவன் கான்வே 3வது இடத்தைப் பிடித்துள்ளார். ஃபாஃப் டு பிளெசிஸ் 466 ரன்களுடன் முதலிடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 ஆட்டங்களில் 428 ரன்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர். கான்வே 414 ரன்களுடன் 3வது இடத்திலும், விராட் கோலி 364 ரன்களுடன் 4வது இடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 354 ரன்களிலும் உள்ளனர்.
பர்பிள் கேப்
பர்பிள் கேப் தரவரிசையில் முகமது ஷமி 9 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளுடன் முன்னணியில் உள்ளார். சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 17 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். புதன்கிழமை மாலை நிலவரப்படி அர்ஷ்தீப் சிங் 15 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil