சி.எஸ்.கே அணியில் இருந்து ரெய்னா விலகிய நிலையில் அவருடைய இடத்தை நிரப்புவது கடினம் என்று கூறிய அந்த அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன், ரெய்னா இடத்தை ஒரு தமிழக வீரரால் நிரப்ப முடியும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டிலும் துபாயிலும் நடைபெற உள்ளது.
13வது ஐபிஎல் சீசன் முதல் போட்டி செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற உள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்டிலும் துபாயிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகக் கூறி நாடு திரும்பினார். அதே போல, சி.எஸ்.கே அணியின் மற்றொரு வீரர் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் அணியில் இருந்து விலகினார். முன்னணி வீரர்கள் 2 பேர் விலகியதால் அந்த அணி சிக்கலுக்குள்ளாகி உள்ளது. அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் அல்லது வேறு வீரர்கள் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில், சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன், நபீல் ஹஷ்மி தொடங்கிய யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ரெய்னா ஹர்பஜன் சிங் இல்லாததை நாங்கள் எதிகொண்டு ஆக வேண்டும். அவர்கள் எல்லா ஐபிஎல் தொடர்களிலும் அவர்களுடைய ஆழமான தாக்கம் இருந்தது. சுரேஷ் ரெய்னா இடத்தை நிரப்புவது நம்ப முடியததாக இருக்கிறது. அது உங்களால் முடியாது. ஐபிஎல் போட்டியில் 2வது அதிக ரன் எடுத்த வீரர் சுரேஷ் ரெய்னா. அவர் ஐபிஎல் தொடரில் அதிகமான போட்டிகளில் விளையாடியவர். அவர் அணியில் எல்லாப் நிலைகளிலும் நல்ல சாதனைகளை வைத்திருக்கிறார்.” என்று கூறினார்.
மேலும், “மிகவும் வெப்பமான ஐக்கிய அரபு எமிரேட் சூழ்நிலையில் அவர் இல்லை. விக்கெட்டுகள் விழுவதற்கு மிகவும் குறைவாகவே வாய்ப்பு உள்ளது. ரெய்னா நம்பமுடியாத அளவில் சுழற்பந்துகளை நன்றாக விளையாடக் கூடியவர்.” என்று வாட்சன் கூறினார்.
ஆனால், வருகிற ஐபிஎல் தொடரில் ரெய்னாவின் இடத்தை நிரப்பக்கூடிய வீரரை வாட்சன் மனதில் வைத்திருப்பதாக தெரியவிலை. ஆனால், முரளி விஜய் ஒரு திறமையான பேட்ஸ்மேன் என்று வாட்சன் கருதுகிறார்.
அந்த பேட்டியில் தொடர்ந்து பேசிய வாட்சன், “சி.எஸ்.கே.வில் ரெய்னா இல்லாதது பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நல்ல துடிப்பான வீரர் முரளி விஜய் போன்ற ஒருவரை நாங்கள் பெற்றுள்ளோம். டி 20 கிரிக்கெட்டில், கடந்த சில ஆண்டுகளில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், அவர் நிஜமாகவே ஒரு நல்ல பேட்ஸ்மேன். அவர் கடந்த ஆண்டு ஓரங்கட்டப்பட்டிருந்தார். இந்த ஆண்டு அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்” என்று வாட்சன் கூறினார்.
ஷேன் வாட்சனின் இந்த பேட்டி மூலம் சி.எஸ்.கே அணியில் சுரேஷ் ரெய்னா இடத்தை முரளி விஜய் நிரப்புவார் என்பது தெரிய வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.