10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்தத் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தனது முதலாவது ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: When ‘outside biryani not allowed’ rule angered MS Dhoni so CSK changed hotel overnight
இந்நிலையில், இந்த ஐ.பி.எல். 2025 தொடரை ஒட்டி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சீசனில் அணி பிளே ஆப்-க்கு முன்னேறாத நிலையில், இந்த சீசனில் சிறப்பான முறையில் செயல்பட திட்டமிட்டு வருகிறார்கள். அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி கடந்த சில வாரங்களாக வலைப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது அதிரடியான பேட்டிங்கைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், களத்தில் எப்போதும் கூலாக தோன்றி, 'கூல் கேப்டன்' என்கிறப் புகழைப் பெற்ற தோனி அவ்வப்போது தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் 2019-ல் நடந்த போட்டி சிறந்த உதாரணம். ஆனால், தோனி களத்திற்கு வெளியிலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
2014 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் தான் அது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிக்காக தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் சென்றுள்ளது. அங்கு ஐ.டி.சி கிராண்ட் ககாதியா ஹோட்டலில் சென்னை அணி வீரர்கள் அனைவரும் தாங்கியுள்ளனர். அப்போது, ஐதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு சி.எஸ்.கே வீரர்களுக்கு தனது வீட்டில் சமைத்த பிரியாணியை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், வெளியில் இருந்து சமைத்த உணவுக்கு தங்களது ஹோட்டலில் அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, வீரர்கள் தங்கள் அறைகளுக்கு பிரியாணியை எடுத்துச் செல்வதை ஹோட்டல் நிர்வாகம் தடை செய்ததாக தகவல்கள் தெரிவித்தன. மற்றொரு தகவல்களின்படி, வீரர்கள் தங்கள் அறைகளுக்கு பிரியாணியை எடுத்துச் செல்ல ஹோட்டல் நிர்வாகம் அனுமதித்ததாகவும், ஆனால் வீரர்கள் பொதுவான இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் கடுப்பான தோனி ஹோட்டலை உடனே மாற்றுமாறு கோரியுள்ளார். அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் ஏற்கனவே தங்கியிருந்த ஐ.டி.சி கிராண்ட் ககாதியா ஹோட்டலில் இருந்து இரவோடு இரவாக தாஜ் கிருஷ்ணா ஹோட்டலுக்கு தங்கச் சென்றுள்ளனர். இதனால், என்ன செய்வது அறியாது புலம்பியுள்ளனர் ஐ.டி.சி கிராண்ட் ககாதியா ஹோட்டல் நிர்வாகத்தினர். இது தொடர்பாக அப்போது செய்திகள் வெளியான நிலையில், அந்த ஹோட்டலில் மட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பி.சி.சி.ஐ), சி.எஸ்.கே-வும் கிட்டத்தட்ட 180 அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் கட்டுப்பட்டால் மொத்தமும் காலியாகியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. ஆனால் வீரர்கள் ராயுடு வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை வயிறார சாப்பிட்ட திருப்தியில் சென்றுள்ளனர்.