ஐ.பி.எல் 16-வது இறுதிப் போட்டி நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு 7:30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்க இருந்தது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி – 4 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவிருந்தன. ஆனால், போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மழை பெய்யத் தொடங்கியது.
முதலில் மிதமான மழை பெய்யத் தொடங்கி பின்னர் கனமழையாக விட்டு விட்டு பெய்தது. ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரிசர்வ் நாள் அடிப்படையில் இன்று (மே 29) திங்கட்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்
இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் அகமதாபாத்தில் 41 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்று (மே 29) அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்த தகவலைப் பார்ப்போம். பெரும்பாலும் மேக மூட்டத்துடனும் பிற்பகலில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
40 சதவீதம் மழைப் பொழிவு, 24 சதவீதம் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பகலில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாக இருக்கும், ஈரப்பதம் 45 சதவீதம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“