Ashwin or Jadeja at Chepauk Tamil News: 10 அணிகள் களமாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சீசனில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் சென்னை அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து வருகிறது. அந்த அணியின் மிகப்பெரிய பலமே சுழற்பந்துவீச்சு தான். எப்பட்டிப்பட்ட மைதானமாக இருந்தாலும், சென்னையின் சூழல் மன்னர்களான மொயீன் அலி, ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் விக்கெட்டுகளை கைப்பற்றி கலக்கி வருகின்றனர். உள்ளூர் மைதானத்தில் அவர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. இவர்களுடன் சேர்ந்து மிரட்ட இலங்கையின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனாவும் அணியில் இணைந்துள்ளார். அவர் இன்றைய ஆட்டத்தில் மிட்செல் சான்ட்னருக்கு பதில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், ராஜஸ்தான் அணியும் 2 சுழல் மாவீரர்களை கொண்டுள்ளது. அவர்களில் ஒருவர் சென்னை மண்ணின் மைந்தர் அஸ்வின். யுஸ்வேந்திர சாஹல் ஒருபுறமும் அஸ்வின் ஒருபுறமும் இடி இடிக்க ஆரம்பித்தால் எதிரணியின் மொத்த பேட்டிங் ஆடரும் காலியாகிவிடும். அதனால், சென்னை வீரர்கள் இவர்களின் ஓவர்களில் கொஞ்சம் பொறுமை காப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
அஸ்வின் vs ஜடேஜா
சென்னை மண்ணில் அஸ்வின் எப்போதுமே ஆதிக்கம் செலுத்தும் சுழல் வீரராக இருந்து வருகிறார். அவரது சுழலில் சிக்கி வெளியேறாத டாப் ஆடர் பேட்ஸ்மேன்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதேபோல், ஜடேஜாவும் இங்கு தனது சுழல் வித்தையை காட்டி இருக்கிறார். அவர் வீசும் அற்புதமான சுழற்பந்துகள் அழகாக ஸ்டம்பை பதம் பார்க்கும்.

அஸ்வின் இதுவரை சேப்பாக்கத்தில் விளையாடியுள்ள 40 ஐ.பி.எல் போட்டிகளில் 46 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இங்கு ஆஃப் ஸ்பின்னர்கள் பந்துவீச திணறிய நாட்களில் அஸ்வின் தனது அசத்தல் பந்துவீச்சால் தனித்து நின்றுள்ளார். அவர் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 1/27, 1/25 மற்றும் 2/25 என்ற புள்ளிகளைப் பெற்றுள்ளார், மேலும் தனது மாறுபாடுகளையும் பயன்படுத்துவதில் மிகவும் புத்திசாலியாக இருந்து வருகிறார். இன்றைய போட்டிக்கு முன்னதாக, அஷ்வின் பட்லர், ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட அனைத்து பவர் ஹிட்டர்களுக்கும் எதிராக தன்னை சோதித்துக்கொண்டார்.

மறுபுறம், சேப்பாக்கத்தில் 35 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 19 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது எக்கனாமி விகிதம் 7.07 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 25.5 உள்ளது. ஜடேஜா அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். எம்.எஸ். தோனி அவரை மிகவும் சாதுரியமாக பயன்படுத்தி வருகிறார். அது இந்த சீசனிலும் தொடர்கிறது. சமீபத்தில், இங்கு தமிழக அணிக்கு எதிராக நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் ஜடேஜா ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். எனவே, இன்றும் வழக்கம் போல் தனது சுழல் ஜலத்தை அவர் காட்டினால், சேப்பாக்கத்தில் ரசிகர்கள் பறக்கவிடும் விசில்களை நிறுத்துவது கடினமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil