Virat Kohli and Sourav Ganguly feud Tamil News: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கடந்த 15ம் தேதி அன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 20 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் (டி.சி) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) அணிகள் மோதின. இப்போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
இந்த போட்டிய தொடங்கும் முன்னர், டெல்லி அணியின் வீரர்கள் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டானர். அந்த வீரர்களுக்கு மத்தியில் இருந்த முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கோலியை முற்றிலுமாக புறக்கணித்தார். இதன்பிறகு, டெல்லி அணி 175 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய போது, பவுண்டரி லயனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த கோலி அற்புதமான கேட்ச்சை பிடித்து அசத்தினர். அதன்பின்னர், டெல்லி அணியின் வழிகாட்டியாக டக்அவுட்டில் இருந்த கங்குலிக்கு மரண லுக் (டெத் ஸ்டேர்) ஒன்றை கொடுத்தார். போட்டி முடிந்த பின்னரும் இருவரும் கைகுலுக்கவில்லை.

இந்த சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அதே நாளின் பிற்பகுதியில், இன்ஸ்டாகிராமில் சவுரவ் கங்குலியை கோலி பின்பற்றுவதை நிறுத்திக்கொண்டார். இதேபோல், கங்குலியும் கோலியைப் பின்தொடரவில்லை.

இருவருக்கும் இடையே நடந்தது என்ன?
கடந்த செப்டம்பர் 2021ல், துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை விராட் கோலி அறிவித்து இருந்தார். அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகிய நிலையில், மூத்த வீரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எதற்கு 2 கேப்டன்கள் என்று முடிவு செய்த பிசிசிஐ, தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவித்தது.

இதனால், மனமுடைந்த கோலி, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன்னை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலக்கியதாகவும், டெஸ்ட் அணியை தேர்வு செய்வதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டார்கள். அப்போது 5 தேர்வாளர்கள் நான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க மாட்டேன் என்று என்னிடம் சொன்னார்கள் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.

Photo credit: R. Pugazh Murugan
முன்னதாக, விராட் கோலியை டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும், ஒருநாள் கேப்டன்சி மாற்றம் குறித்து கோலியுடம் தனிப்பட்ட முறையில் தானே பேசியதாகவும், தேர்வாளர்களும் கோலியிடம் பேசியதாகவும் அப்போதைய பிசிசிஐ தலைவைராக இருந்த சவுரவ் கங்குலி தெரிவித்தார். இந்த முரண்பட்ட கருத்துகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், கங்குலி – கோலி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. எவ்வாறாயினும், கோலிக்கு இது பெரும் மன உளைச்சலையும், ஏமாற்றத்தையும் கொண்டு வந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil