scorecardresearch

மறக்க முடியுமா? பவுலராக கலக்கிய தோனி; கிளீன் போல்ட் விக்கெட்- வீடியோ

தோனி தனது 3வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டிராவிஸ் டவ்லினை கிளீன் போல்ட் செய்து அசத்தி இருந்தார்.

Cricket video Tamil News: MS Dhoni's First international Wicket 

MS Dhoni’s First international Wicket Tamil News: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக கேப்டன்களில் முக்கியமானவராக மகேந்திர சிங் தோனி வலம் வருகிறார். ஐசிசி நடத்திய 3-வகையாக உலகக் கோப்பைகளையும் (2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி) இவரது தலைமையிலான அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இவர், ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

தோனியின் தலைமையிலான சென்னை அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை (2010, 2011, 2018, 2021)வாகை சூடியுள்ளது. தற்போது 5வது பட்டத்திற்கான வேட்டையில் நடப்பு சீசனில் களமிறங்கியுள்ளது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேயுள்ளது. சென்னையின் இந்த அசத்தலான வெற்றிகள் அதன் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.

பவுலராக கலக்கிய தோனி</strong>

தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2004ம் ஆண்டில் அறிமுகமானார். உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய அவருக்கு விக்கெட் கீப்பிங் பக்க பலமாக இருந்தது. அடித்து ஆடுவதற்கு பெயர் போன அவர், அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டனாக பொறுப்புடன் வழிநடத்துவார். அதனால், அவருக்கு “கேப்டன் கூல்” என்ற செல்லப்பெயர் ரசிகர்களால் அன்புடன் வழங்கப்பட்டது.

தோனி, 2007ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென்ஆப்ரிக்க மண்ணில் நடந்த அந்த தொடரின் இறுதிப்போட்டியில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா கோப்பையை முத்தமிட்டது. அதுமுதல் தோனிக்கு ஏறுமுகம் தான்.

இதன்பிறகு, தென்ஆப்பிரிக்காவில் நடந்த 2009 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியை வழிநடத்தினார் தோனி. அதில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டினார். அந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங் பொறுப்பை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்த தோனி, சர்வதேச அரங்கில் தனது முதல் ஓவரை வீச தயாரானார். முதல் 2 பந்துகள் அடித்து விரட்டப்பட்ட நிலையில், அவரது 3வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டிராவிஸ் டவ்லினை கிளீன் போல்ட் செய்தார். இதன்மூலம், சர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தி இருந்தார் தோனி.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 129 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32.1 ஓவரிலே இலக்கை எட்டியது. 2 ஓவர்களை வீசிய தோனி 14 ரன்கள் விட்டுக்கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Cricket video tamil news ms dhonis first international wicket