IPL Points Table 2023, Orange Cap, Purple Cap Standings Tamil News: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கான்வே 83 ரன்னும், ஷிவம் துபே 27 பந்தில் 52 ரன்னும் குவித்தனர்.
தொடர்ந்து 227 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 8 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், மதீஷா பத்திரனா 2 விக்கெட்டுகளையும், ஆகாஷ் சிங், மஹீஷ் தீக்ஷனா, மற்றும் மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
டாப் 3-ல் நுழைந்த சி.எஸ்.கே
பெங்களூரு அணிக்கு எதிரான இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்னையின் ரன்ரேட் +0.265 ஆக உள்ளது. முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் 8 புள்ளிகளுடனும், 2வது இடத்தில் உள்ள லக்னோ 6 புள்ளிகளுடனும் உள்ளன.
ஆரஞ்சு கேப்
நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு கேப் பந்தயத்தில் பெங்களுரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 259 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார். வெங்கடேஷ் ஐயர் (234 ரன்கள்), ஷிகர் தவான் (233 ரன்கள்) மற்றும் ஷுப்மான் கில் (228 ரன்கள்) ஆகியோர் தொடக்கூடிய தூரத்தில் உள்ளனர். அதேசமயம், பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் (228 ரன்கள்) பந்தயத்தில் உள்ளார்.
பர்பிள் கேப்
நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களுக்கான பந்தயம் தடைபடாமல் உள்ளது. தலா 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்திலும், மார்க் வுட் 2வது இடத்திலும், ரஷீத் கான் 3வது இடத்திலும் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.