CSK tickets black market in Chennai Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நாளை புதன்கிழமை (ஏப்ரல் 12ம் தேதி) இரவு 7:30 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும் 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதே சூழல்தான் சென்னை - லக்னோ அணிகள் மோதிய போட்டிக்கும் இருந்தது. இந்த நிலையில் தான் நாளை நடக்கும் போட்டிக்கும் கள்ளச் சந்தை விற்பனை படு ஜோராக நடந்து வருவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் டிக்கெட்டுகள் சிறிது நேரத்திலே விற்று தீர்ந்த நிலையில், 750 ரூபாய் கொண்ட டிக்கெட்டை சமூக வலைதளம் மூலமாக ரூ.5000-க்கும் அதற்கு மேலும் விற்கப்படுகின்றன. சில நேரங்களில் ரூ.6000 வரையிலும் விற்கப்பட்டும் வருகின்றன.
டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் இரவு முழுவதும் காத்திருந்தாலும் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுவதாகவும், இது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காரசாரமாக விவாதித்தும் வருகின்றனர். மேலும், டிக்கெட் கிடைக்காத விரக்தியால் பல்வேறு கருத்துகளையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதோடு, போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் கார்ப்பரேட், ஸ்பான்சர்கள், பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பவர்கள் ஆகியோருக்கு செல்வதாகவும், மொத்தத்தில் மைதானத்தின் இருக்கைகளில் 40 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கப்படுவதாககவும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
"வரையறுக்கப்பட்ட கவுண்டர் விற்பனையைத் தவிர, ஆன்லைன் முன்பதிவுக்காக நான்கு ஸ்டாண்டுகளில் இருக்கைகள் மட்டுமே திறக்கப்பட்டன. கார்ப்பரேட்கள், பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நிகழ்வு நிர்வாகிகளுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது." என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், மொத்த டிக்கெட்டுகளில் 20% பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு (TNCA) வழங்கியுள்ளோம். இது தவிர, கிரிக்கெட் சங்க (டிவிஷன்) கிளப்புகளுக்கு 13,000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
எனவே, எங்களால் 15,000 டிக்கெட்டுகளை மட்டுமே விற்க முடிகிறது, அவை சிறிது நேரத்தில் விற்றுப் போய்விடுகின்றன. கள்ளச் சந்தை விற்பனையைப் பற்றி எங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகளை ஸ்பான்சர்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் உறுதியளித்துள்ளோம்." என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக 13 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். இருப்பினும், ஐபிஎல் டிக்கெட்டுகள் ட்விட்டர் மற்றும் பிற தளங்களில் கள்ளச் சந்தையில் வெளிப்படையாக விற்கப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.