ஐ.பி.எல் 16-வது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. 10 அணிகள் மோதிய நிலையில் லீக் சுற்றுகள் முடிவடைந்து தகுதிச் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. இன்று (மே 23) நடைபெறும் முதல் தகுதிச் சுற்று போட்டியில் புள்ளப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் 2-வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனஸ்ஸுக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி மற்றொரு அணியுடன் விளையாடும். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 2-ம் இடம் பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டுகின்றனர். சதம், அரை சதம் என ரன்களை குவிக்கின்றனர். வலுவான தொடக்கத்தை அமைக்கின்றனர். பந்து வீச்சில் ஜடேஜா (17 விக்கெட்), துஷர் தேஷ்பாண்டே (20 விக்கெட்), 'குட்டி மலிங்கா' என்று அழைக்கப்படும் பதிரானா (15 விக்கெட்) அணிக்கு தக்க நேரத்தில் கைகொடுக்கின்றனர்.
அதே நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இளம் வீரர்களுடன் பேட்டிங், பந்து வீச்சில் மற்ற அணிகளை மிரட்டுகின்றனர். தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இந்த சீசனில் 2 சதத்துடன் 680 ரன்கள் குவித்துள்ளார். டேவிட் மில்லர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, விருத்திமான் சஹா, விஜய் சங்கர் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பந்து வீச்சில் ரஷித் கான் (24 விக்கெட்), முகமது ஷமி (24 விக்கெட்), நூர் அகமது பலமாக விளையாடி வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சென்னை அணி குஜராத்தை வெற்றி பெறவில்லை. அதனால் இப்போட்டி இரு அணிகளுக்கும் சவாலாகவே இருக்கும். உள்ளூரில் சென்னை அணி விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பர். எனினும் இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil