CSK vs PBKS IPL 2023 Tickets Bokking Tamil News: 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் – 2023) போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ல் வெற்றி 2ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக சென்னை அணி ராஜஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இப்போட்டியானது நாளை (வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
சி.எஸ்.கே – பஞ்சாப் மோதல் – டிக்கெட் புக்கிங்

இந்நிலையில், ஐ.பிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வருகிற 30ம் தேதி (மாலை 3.30 மணி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. குறைந்தபட்ச விலையான ரூ.1,500-க்குரிய டிக்கெட்டுகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் விற்கப்பட உள்ளது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளும் கவுண்ட்டரில் நாளை (வியாழக்கிழமை) தரப்பட உள்ளது.
ரூ.3,000 மற்றும் ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் கிடைக்கும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என்றும், PAYTM மற்றும் http://www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என்றும் சி.எஸ்.கே நிர்வாகம் கூறியுள்ளது.
இருப்பினும், அதிகாலை முதலே காத்திருந்து டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாந்து வரும் நிலையில், டிக்கெட் புக்கிங்கிற்கு ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதேபோல் எவ்வளவு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், இதுபற்றி சிஎஸ்கே நிர்வாகம் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டால் தான் கால்கடுக்க காத்திருந்து ஏமாறுவது குறையும் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

பதிலடி கொடுக்குமா சென்னை?
சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கடைசியாக மோதிய 10 போட்டிகளில் இரு அணிகளும் தலா 5ல் வென்றுள்ளன. இவ்விரு அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியுற்றது. இந்த தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil