இதுவரை ஒரு வெற்றியைக் கூட இந்த சீசனில் பெறாமல் இருந்துவரும் சிஎஸ்கேவும், 3 வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மோதுகிறது.
மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணியை ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்று வழிநடத்தி இதுவரை ஒரு ஆட்டம் கூட வெற்றி பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரு அணியை ஃபாப் டூ பிளெசிஸ் வழிநடத்துகிறார். அவர் ஏறகனவே சிஎஸ்கே அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. தனது முதல் ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங் அணியிடம் தோல்வி அடைந்த பெங்களூரு அணி, அடுத்தடுத்த ஆட்டங்களில் கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை இந்தியன்ஸ் அணிகளை வீழ்த்தி வெற்றி நடை போட்டு வருகிறது.
அந்த அணியில் அனூஜ் ராவத், விராட் கோலி, கிலென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என அதிரடி ஆட்டக்காரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
பந்துவீச்சிலும் ஹசரங்கா,சிராஜ் ஆகியோர் பக்க பலமாக இருக்கின்றனர். குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்கான கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே சென்றதை அடுத்து, ஹர்ஷல் படேல் இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்து வந்துள்ளது. 4 முறை சாம்பியனான அணி இந்த முறை தொடக்கம் முதல் தடுமாறி வருகிறது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 ரன்கள் எடுத்தபோதிலும் தோல்வியைத் தழுவியது சிஎஸ்கே.
SRH vs GT Highlights: அரைசதம் விளாசிய கேப்டன் வில்லியம்சன்; ஐதராபாத்துக்கு 2வது வெற்றி – குஜராத்துக்கு முதல் தோல்வி!
லக்னோக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்களை சிஎஸ்கே குவித்த போதிலும் அந்த ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த முறை சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் இன்னும் தனது அதிரடி ஆட்டத்தை ஆடாமல் இருந்து வருகிறார்.
பந்துவீச்சிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது சிஎஸ்கே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“