IPL 2023 – CSK vs RCB, JioCinema Tamil News: 16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கிய 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 227 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி பெங்களூருவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தை ‘ஜியோ சினிமா’ ஆப்-பில் நேரலையில் கண்டு களித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதையும் படியுங்கள்: பரபரப்பின் உச்சம் செல்லும் சி.எஸ்கே. மேட்ச்… ராக்கெட் வேகத்தில் எகிறும் வியூவர்ஷிப்!
ஐ.பி.எல் 2023 தொடருக்கான போட்டிகளை டி.வி-யில் ஸ்டார் நெட்ஒர்க் சேனல்களும், ஓ.டி.டி தளத்தில், அதாவது டிஜிட்டலில் வையாகாம் 18-இன் ‘ஜியோ சினிமா’ ஆப்-பும் நேரலையில் ஒளிபரப்பி வருகின்றன. இதில், டிஜிட்டலில் ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்த முகேஷ் அம்பானியின் வையாகாம் 18 நிறுவனம், போட்டிகளை நேரலையில் இலவசமாக பார்க்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால், கிரிக்கெட் போட்டிகளை டிஜிட்டலில் பார்த்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கை போட்டிக்கு போட்டி அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தை நேரலையில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை நேற்று புதிய உச்சத்தை எட்டியது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு கடைசி 20 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து, கையில் 6 விக்கெட்டுகளை வைத்து இருந்தது.

இந்த தருணத்தில் 18வது ஓவரை வீசிய மதீஷ பத்திரன 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஷாபாஸ் அகமது-வின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அவர் வீசிய கடைசி ஓவரில் பெங்களூருவுக்கு 19 ரன்கள் தேவைப்பட்டபோது, 10 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த அவர், அதிரடியாக மட்டையைச் சுழற்றிய பிரபுதேசாயின் விக்கெட்டை கடைசி பந்தில் கைப்பற்றி அசத்தினார். இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்: பரபரப்பின் உச்சம் செல்லும் சி.எஸ்கே. மேட்ச்… ராக்கெட் வேகத்தில் எகிறும் வியூவர்ஷிப்!

இந்த பரபரப்பு தருணத்தை மைதானத்தில் இருந்து பார்த்த ரசிகர்களும், நேரலையில் கண்டு களித்த ரசிகர்களும் உற்சாக வெள்ளத்தில் மூழ்கினர். அதனால், டி.வி மற்றும் டிஜிட்டல் தளங்களில் போட்டியைக் கண்டு களித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. குறிப்பாக, கடைசி ஓவரில் ஜியோசினிமாவில் ஒரே நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2.4 கோடியைத் தொட்டது. முன்னதாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.86 கோடி ஆகும். அது 2019 சீசனின் இறுதிப் போட்டியாகும்.
நடப்பு சீசனில், கடந்த வாரம் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் இறுதி ஓவரில் ஜியோசினிமா 2.2 கோடி பார்வையாளர்களைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியிருந்தது. தற்போது சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்திற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை அதை முறியடித்துள்ளது.
இதையும் படியுங்கள்: பரபரப்பின் உச்சம் செல்லும் சி.எஸ்கே. மேட்ச்… ராக்கெட் வேகத்தில் எகிறும் வியூவர்ஷிப்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil