scorecardresearch

புதிய ஹீரோவாக உருவெடுத்த 21 வயது தமிழக வீரர் சாய் சுதர்சன்: ஹர்திக் பாண்டியா பாராட்டு

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார்.

DC vs GT IPL 2023: Hardik Pandya on Sai Sudarshan TAMIL NEWS
Hardik Pandya lauds Sai Sudharsan, DC vs GT IPL 2023 Tamil News

IPL 2023, DC vs GT,  Hardik Pandya on Sai Sudarshan Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக கேப்டன் வார்னர் 37 ரன்களும், சர்பராஸ் கான் 30 ரன்களும் எடுத்தனர். குஜராத் தரப்பில் ஷமி மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணியில் தொடக்க வீரர்களான விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் 14 ரன்னில் ஆட்டமிழந்தனர். களத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில், 18.1 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்த குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை அதன் சொந்த மைத்தனத்திலே வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் குஜராத் அணி நடப்பு சீசனில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

புதிய ஹீரோ

குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சொந்த மைதானத்தில் (நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்) எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் பறக்க விட்ட சிக்ஸரை கேட்ச் பிடிக்க பாய்ந்த கேன் வில்லியசம்சனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், பேட்டிங்கின் போது, அவருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக சாய் சுதர்சன் களம் புகுந்தார். 3 பவுண்டரிகளை விரட்டிய அவர் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும், குஜராத் அணிக்கு தேவைப்பட்ட ‘நல்ல தொடக்கத்தை’ கொடுத்திருந்தார். இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் சென்னையை வீழ்த்தி இருந்தது.

காயம் காரணமாக ஓய்வு எடுக்க சென்ற வில்லியசம்சன் தொடரில் இருந்தே விலகும் நிலை ஏற்பட்ட நிலையில், அவர் நேற்று சொந்த நாடு (நியூசிலாந்து) திரும்பினார். இதனால், குஜராத் அணியில் 3வது இடம் நிரப்பப்பட வேண்டிய சூழல் எழவே, அந்த இடத்தில் சாய் சுதர்சனையே மீண்டும் களமிறங்க அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சாய் சுதர்சன். அரைசதம் அடித்த அவர் 48 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் சேர்த்து அசத்தினார். அவரின் இந்த அசாத்திய ஆட்டம் யார் இந்த சாய் சுதர்சன்? என்று கிரிக்கெட் ரசிகர்களை இணையத்தில் தேட வைத்துள்ளது.

யார் இந்த சாய் சுதர்சன்?

21 வயதான சாய் சுதர்சன் தமிழ்நாட்டின் கிரிக்கெட் வீரர் ஆவார். தென் மண்டல அளவிலான யு-14 தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் அவர் 4வது இடம் பிடித்தார். முதலிடத்தை பிடித்தவரான திலக் வர்மா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறது. அங்கிருந்து தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய சாய் சுதர்சன் வினோத் மன்கட் டிராபி, யு-19 சேலஞ்சர் டிராபி என்று அத்தனை தொடர்களிலும் தனது முத்திரையை பதித்தார். அந்த தருணத்தில் தான் தமிழகத்தின் பிரீமியர் லீக் தொடரான டி.என்.பி.எல் வாய்ப்பு அவரது கதவை தட்டியது.

ஆனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அவரை ஓராண்டு பெஞ்சில் அமர வைக்கவே, அடுத்த ஆண்டு கோவை லைகா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆனார் சாய். சேலம் அணிக்கு எதிரான அவரது ஆட்டம், தொடரை உன்னிப்பாக பார்த்து வந்தோரின் புருவங்களை உயர்ச் செய்தது. அந்த ஆட்டத்தில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 43 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்த அதிரடி ஆட்டம் அவரை இந்தாண்டு நடந்த டி.என்.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக மாற்றியது. அவரை லைகா கோவை கிங்ஸ் ரூ. 21.60 லட்சம் கொடுத்து வாங்கியது. ஐபிஎல் தொடரில் அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு வாங்கிய குஜராத் அணி தற்போது அவரை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கி வருகிறது. அவரும் அபாரமாக மட்டையை சுழற்றி கவனம் ஈர்த்து வருகிறார்.

கேப்டன் பாண்டியா புகழாரம்

டெல்லி அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “அவர் (சாய் சுதர்சன்) பயங்கரமாக பேட்டிங் செய்து வருகிறார். அணியின் உதவி ஊழியர்களுக்கும், அவருக்கும் நன்றிகள். கடந்த 15 நாட்களில் அவர் செய்த பேட்டிங் பயிற்சி, நீங்கள் இப்போது பார்க்கும் முடிவுகள். அவை அனைத்தும் அவரது கடின உழைப்பு. நான் தவறாக சொல்லவில்லை என்றால், இன்னும் 2 ஆண்டுகளில், அவர் ஐ.பி.எல் போன்ற லீக் கிரிக்கெட்டுக்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்காகவும் சிறப்பாக ஏதாவது செய்வார்.” என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Dc vs gt ipl 2023 hardik pandya on sai sudarshan tamil news

Best of Express