MS Dhoni Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்ற வந்த 15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜாதான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்தாண்டு நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு அணியை மறுகட்டமைத்த நடப்பு சாம்பியானான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தொடர் தோல்விகளால் துவண்டது. மேலும், லீக்கில் நடந்த 14 ஆட்டங்களில் 4ல் மட்டும் வெற்றி பெற்று பட்டியலில் 9வது இடத்தைப்பிடித்து பெரும் பின்னடைவை சந்தித்தது.
சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில், லீக் சுற்றின் பாதியிலே பணிச்சுமை, கவனச் சிதறல் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து சென்னை அணியை மீண்டும் எம்.எஸ் தோனி வழிநடத்தினார். நடப்பு தொடர் அவரது தலைமையிலான அணி எதிர்பார்த்தது போல் அமையவில்லை. என்றாலும் அடுத்த சீசனில் மிகவும் உறுதியாகவும், வலிமை பெற்றும் “கம் பேக்” கொடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி தனது மாற்றுத்திறனாளி ரசிகையின் இல்லத்திற்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நடப்பு சீசனுக்கு பிறகு கேப்டன் தோனி முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ள நிலையில், அவர் திருமண அல்லது டிஎன்பிஎல் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்திருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் முதலில் அவர் தனது மாற்றுத்திறனாளி ரசிகையை சந்தித்து அவரது மனதை குளிரச் செய்துள்ளார்.
தோனியை நேரில் கண்ட லாவண்யா என்ற அந்த ரசிகை, தோனியின் ஓவியத்தை அவருக்கு வழங்கினார். தோனி அவருக்கு கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதை லாவண்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“அவரைச் சந்தித்த உணர்வு வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று, அவர் கனிவானவர், இனிமையாகவும், மென்மையாகவும் பேசக்கூடியவர்.
என் பெயர் எழுத்துப்பிழை பற்றி அவர் என்னிடம் கேட்ட விதம், அவர் என் கையை குலுக்கியது, “ரோனா நஹி” என்று கூறியதும் என் கண்ணீரைத் துடைத்ததும் எனக்கு ஒரு தூய்மையான ஆனந்தத்தை தந்தது.
இது என் வாழ்நாளில் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம். தோனி என்னுடன் பேசிய வார்த்தைகளை எப்போதும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். சாகும் வரை தோனியின் ரசிகையாக தான் இருப்பேன். அவருடன் இருந்த பொன்னான நேரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒன்று என்று. 31 மே, 2022 எனக்கு எப்போதும் சிறப்பானதாக இருக்கும்.” என்று கூறி அந்த பதிவில் நெகிழ்ந்துள்ளார்.
இந்த பதிவுடன் லாவண்யா இணைத்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது அவை சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil