IPL GT vs RR LIVE score: 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியதில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் 16-வது தொடரின் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (சென்னை, டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வி (கொல்கத்தா அணியிடம்) கண்டு 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக விளங்கி வருகிறது. பேட்டிங்கில் விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியாவும், பந்து வீச்சில் ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, ஜோஷ் லிட்டில், மொகித் ஷர்மாவும் வலுசேர்க்கிறார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி (ஐதராபாத், டெல்லி, சென்னை அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வியை (பஞ்சாப் அணியிடம்) பெற்று நல்ல நிலையில் உள்ளது. பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் (204 ரன்கள்), ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயரும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (20 விக்கெட்), ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இன்றைய போட்டியில், குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சஹா ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்த்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து கில்லுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் 45 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து அபினவ் மனோகர் மில்லருடன் இணைந்தார். அதிரடியில் மிரட்டிய மனோகர் 13 பந்தில் 27 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளும், போல்ட், சாம்பா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து பட்லர் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அடுத்து களமிறங்கிய பட்டிக்கல் 26 ரன்களும், ரியான் பராக் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில், 60 (32) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக ஹெட்மயருடன், துருவ் ஜுரல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ஹெட்மயர் அதிரடி காட்டி அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜுரல் 18 (10) ரன்களில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய அஸ்வின் அதிரடி காட்டி 10 (3) ரன்களில் கேட்ச் ஆனார். கடைசி ஒவரில் ஹெட்மயர் 25 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் ஹெட்மயர் 56 (26) ரன்களும், போல்ட் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் அணி 19.2 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"