15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இத்தொடருக்கான பிளே ஆஃப் போட்டிகள் இன்று முதல் நடைபெறுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அச்சம் காரணமாக தொடர் ஐக்கிய அரபு மண்ணில் நடந்த நிலையில், இந்தாண்டும் அந்த அச்சம் தொடர்ந்தது. ஆனால், தொடருக்காக பல முன்னேற்பாடுகளை செய்த ஐபிஎல் நிர்வாகம் ஒரு மாநிலத்திற்குள் போட்டிகளை நடத்த முடிவு செய்தது. இதன்படி லீக் போட்டிகள் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடத்தப்பட்டன.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமாடியுள்ளன. இப்படி 10 அணிகள் மோதுவது 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். இதேபோல் நான்கு மைதானங்களில் 70 லீக் போட்டிகள் நடத்தப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.
இந்த தொடரில் வீரர்களின் சிறந்த ஆட்டங்களை பார்க்க முடிந்தது. புதிய ரெக்கார்டுகள் மற்றும் குறிப்பிடத்தக்க வெற்றிகள் ரசிகர்கள் மத்தியில் புன்னகையை தவழ செய்தது. மேலும், அவர்களின் ஆதர்ச நாயகர்களின் ஆட்டம், ஐபிஎல் அறிமுகம் செய்த புதிய முகங்களின் அதிரடி ஆட்டம், ஃபார்ம் அவுட் என்று கூறப்பட்ட வீரர்களின் ரன்மழை, சிக்ஸர்களால் வாணவேடிக்கை காட்டிய முன்னணி வீரர்கள், பந்துவீச்சு தாக்குதலால் ஸ்டம்ப்பை பதம் பார்த்த வேக மற்றும் சுழல் வீச்சு மன்னர்களின் சுழல் மாயம் என பலரது ஆட்டமும் பார்ப்போரின் மனங்குளிர செய்தது.
அவ்வகையில், நடப்பு ஐபிஎல் தொடர் அரங்கில் சிறந்து விளங்கிய 11 வீரர்களை அவர்களின் பேட்டிங் வரிசை வாரியாக இங்கு பார்ப்போம்.
- ஜோஸ் பட்லர்
போட்டிகள்: 14, ரன்கள்: 629, சராசரி: 48.38, ஸ்ட்ரைக் ரேட்: 146.96, சதம் (100): 3, அரைசதம் (50): 3, அதிபட்ச ரன் (ஹைய் ஸ்கோர்): 116
நடப்பு தொடரில் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்தவராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் உள்ளார். இந்த சீசனில் அவர் செய்த பேட்டிங்கை இரண்டு பாதிகளாக பிரிக்கக்கலம். அந்த வகையில், முதல் ஏழு ஆட்டங்களில் மூன்று சதங்கள் அடித்து 491 ரன்கள் எடுத்த அவர், கடைசி ஏழு ஆட்டங்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் கோலியின் 2016ம் ஆண்டு சீசனின் சாதனையை முறியடித்து விடுவார் என பலரும் தெரிவித்தனர். ஆனால், பட்லர் அதன் அருகில் தான் நெருங்கி இருக்கிறார்.
- டேவிட் வார்னர்
போட்டிகள்: 12, ரன்கள்: 432, சராசரி: 48.00, ஸ்ட்ரைக் ரேட்: 150.52, அரைசதம் (50): 5, அதிபட்ச ரன் (ஹைய் ஸ்கோர்): 92*
2009 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக தனது ஐபிஎல் அறிமுகம் செய்த ஐபிஎல் ஜாம்பவான் டேவிட் வார்னர், நடப்பு தொடரில் (2022) அந்த அணியில் மீண்டும் இணைந்தார். முன்னதாக அவர் வழிநடத்தி வந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரின் ஃபார்ம் அவுட்யை கோடிட்டுக் காட்டி முதலில் கேப்டன் பதவியையும், பின்னர், அணியில் இருந்தும் கழற்றி விட்டது. இதனால் மனம் நொந்த வார்னர் தன்னை மீண்டு பட்டை தீட்டிக்கொண்டு டி20 உலக்கோப்பை தொடரில் களமாடினார். அதிரடி ஆட்டத்துடன் ரன் மழை பொழிந்த அவர் ஆஸ்திரேலிய அணி கோப்பையை முத்தமிட முக்கிய காரணமாக இருந்தார். மேலும், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
அதே ஃபார்மை வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களிலும் வெளிப்படுத்தி இருந்தார். அவரை டெல்லி அணி ஏலத்தில் வாங்கி, பிருத்வி ஷாவுடன் ஜோடி சேர்த்தது. இளம் வீரருடன் வலுவான ஜோடி அமைத்த வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரில் இருக்கும் ஆபத்தான தொடக்க ஜோடி என்றும் கூறும் அளவிற்கு மூக்கு மேல் விரல் வைக்க செய்தார். இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல், கிடைத்த வாய்ப்பை பறிகொடுத்தது. எனினும், வார்னரின் பேட்டிங் மெச்சும் படியாதனாகவே இருந்தது.
- ராகுல் திரிபாதி
போட்டிகள்: 14, ரன்கள்: 413, சராசரி: 37.54, ஸ்ட்ரைக் ரேட்: 158.23, அரைசதம் (50): 3, அதிபட்ச ரன் (ஹைய் ஸ்கோர்): 76*
ஐபிஎல் தொடரில் ராகுல் திரிபாதி 1798 ரன்களை குவித்துள்ளார். இதுவரை இவ்வளவு ரன்களை எந்தவொரு அன்கேப்டு (uncapped) வீரரும் எடுத்தது இல்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடிய இவர் அந்த அணி இவரை எந்த இடத்தில் களமிறங்கினாலும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் அந்த அணி 5 போட்டிகளில் தொடர் வெற்றியை ருசிக்க ராகுல் திரிபாதி முக்கிய பங்காற்றியும் இருந்தார்.
31 வயதான இவர் தனது சிக்ஸர் பறக்கவிடும் திறனை மேம்படுத்தி இருக்கிறார். இவரை இந்திய அணியில் சேர்ப்பதற்கு வயது ஒன்றும் தடையாக இருக்காது. மேலும், சூர்யகுமார் யாதவின் இடத்திற்கு இவர் பொருத்தமானவர் என்றால் நிச்சயம் மிகையாகாது.
- ஹர்திக் பாண்டியா
போட்டிகள்: 13, ரன்கள்: 413, சராசரி: 41.30, ஸ்ட்ரைக் ரேட்: 131.52, அரைசதம் (50): 4, அதிபட்ச ரன் (ஹைய் ஸ்கோர்): 87* விக்கெட்டுகள்: 4 எக்கனாமி: 7.79
அனைவரும் அதிர்ஷ்டம் என்று அழைக்கிறார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் லீக் கட்டத்திற்குப் பிறகு 10 வெற்றிகளுடன் மிகவும் வெற்றிகரமான அணியாக உருவெடுத்துள்ளது. ஐபிஎல் 2022க்கு முன், பாண்டியா 175 டி20 போட்டிகளில் எட்டு அரைசதங்களை மட்டுமே அடித்திருந்தார். ஆனால் இந்த சீசனில் மட்டும் அவர் நான்கு அரைசதங்களை அடித்துள்ளார். இதற்கு அவர் குஜராத் அணியில் டாப் ஆடரில் களமிறங்கியது முக்கிய காரணமாகும். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் ஒரு ஃபினிஷராகவே இருந்தார்.
ஆனால், கேப்டன் பாண்டியாவின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்துள்ளது. அவரின் பந்துவீச்சு இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஏனெனில், 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 24.3 ஓவர்கள் மட்டுமே வீசி இருக்கிறார். இடுப்பு காயம் காரணமாக ஒரு ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடருக்கான கேப்டன் விருதை வழங்கினால், அதைப் பெற ஹர்திக் பாண்டியாவை தவிர யாருக்கும் உரிமை இல்லை.
- லியாம் லிவிங்ஸ்டோன்
போட்டிகள்: 14, ரன்கள்: 437, சராசரி: 36.41, ஸ்ட்ரைக் ரேட்: 182.08, அரைசதம் (50): 4, அதிபட்ச ரன் (ஹைய் ஸ்கோர்): 70 விக்கெட்டுகள்: 6 எக்கனாமி: 8.78
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் லியாம் லிவிங்ஸ்டோனும் ஒருவர். இந்த இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டரை பஞ்சாப் கிங்ஸ் ரூ.11.50 கோடிக்கு வாங்கியது. அதற்கு ஏற்ற சன்மானத்தை சம்பாதித்துக் கொடுத்தாரா? என்றால், நிச்சயம் "ஆம்" எனலாம்.
லிவிங்ஸ்டோன் இந்த தொடரில் 34 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார். மேலும், அதிக சிக்ஸர்களை பறக்க விட்ட வீரர்களின் பட்டியலில் அவர், அவரது சக இங்கிலாந்து வீரரான பட்லருக்கு (37) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதோடு ஐபிஎல் சீசனில் 1000வது சிக்ஸரை அடித்த பெருமையையும் பெற்றார். தவிர அவரது ஆஃப் ஸ்பின் மற்றும் லெக் ஸ்பின் மூலம் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியும் உள்ளார்.
- தினேஷ் கார்த்திக்
போட்டிகள்: 14, ரன்கள்: 287, சராசரி: 57.40, ஸ்ட்ரைக் ரேட்: 191.33, அரைசதம் (50): 4, அதிபட்ச ரன் (ஹைய் ஸ்கோர்): 66*
இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக ஃபினிஷராக ஜொலித்த தினேஷ் கார்த்திக், 191.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 287 ரன்கள் குவித்துள்ளார். அவரது நிலையான ஆட்டதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
“நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதே பெரிய இலக்கு. உலகக் கோப்பை நெருங்கி வருவதை நான் அறிவேன். நான் அந்த உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன், மேலும் இந்தியா அந்த எல்லையை கடக்க உதவ விரும்புகிறேன், ”என்று நடப்பு ஐபிஎல் தொடரின் போது விராட் கோலியிடம் கார்த்திக் கூறியிருந்தார்.
- ரஷித் கான்
போட்டிகள்: 14, விக்கெட்டுகள்: 18, சராசரி: 21.55, எகானமி: 6.94; ரன்கள்: 91, ஸ்ட்ரைக் ரேட்: 206.81, அதிபட்ச ரன் (ஹைய் ஸ்கோர்): 40
ரஷித் கான் ஒருவேளை டி20 ஃபார்மெட்டில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருக்கலாம். ஆனால், புதிய அணி மற்றும் கூடுதல் பொறுப்பு என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு, தான் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவர் என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
வழக்கம் போல் தனது பந்துவீச்சில் சுழல் வித்தை காட்டிய ரஷித் கான் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி 6.95 என்ற நல்ல எகானமி ரேட்டுடன் உள்ளார். இதேபோல், பேட்டிங்கிலும் அசத்திய அவரின் சிறந்த ஐபிஎல் சீசன் "இது" தான் என்று கூறலாம். அணிக்கு தேவையான தருணத்தில் சிக்ஸர்களை அடித்து ரன்களை குவித்து கொடுத்த அவர் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றும் இருந்தார்.
நவீன கிரிக்கெட்டில் ரஷித் கானை விட யாரும் சிறப்பாக செக்-விப் செய்ய மாட்டார்கள். மேலும், கொல்கத்தாவின் பாட் கம்மின்ஸ் மற்றும் மும்பயின் டிம் டேவிட் ஆகியோருக்குப் பிறகு அவர் தொடரில் மூன்றாவது சிறந்த ஸ்ட்ரைக்-ரேட்டைக் கொண்டவராக இருக்கிறார்.
- யுஸ்வேந்திர சாஹல்
போட்டிகள்: 14, விக்கெட்டுகள்: 26, சராசரி: 16.53, எகானமி: 7.67
யுஸ்வேந்திர சாஹலுக்கு இது மீட்பின் சீசன் என்றே குறிப்பிடலாம். அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து முதலில் நீக்கப்பட்டார். பின்னர் தனது 8 ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் வாழக்கையை கழித்த ஆர்சிபி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். மெகா ஏலத்தின் போது அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 6.50 கோடிக்கு வாங்கியது.
ஏலத்தின் போது பேரம் பேசி வாங்கப்பட்ட இவர் சுழல் மன்னன் அஸ்வினுடன் இணைந்து அபாரமான சுழற்பந்துவீச்சு தாக்குதல் ஜோடியை உருவாக்கினார். சாஹல் தற்போது 14 ஆட்டங்களில் 26 விக்கெட்டுகளுடன் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் ஊதா நிற தொப்பியை வசப்படுத்தியதோடு உள்ளார்.
- ஹர்ஷல் படேல்
போட்டிகள்: 13, விக்கெட்டுகள்: 18, சராசரி: 19.77, எகானமி: 7.68
ஹர்ஷல் படேல் ஆர்சிபி அணிக்காக 15 ஆட்டங்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, கடந்த சீசனில் (ஐபிஎல் 2021) அந்த அணி பிளேஆஃப்களுக்கு முன்னேற உதவி, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த ஆண்டு, அவர் ஒரு சீசனில் மட்டும் ஆச்சரியப்படுத்துபவர் என்பதை கடந்து தனது விலையை நியாயப்படுத்தியுள்ளார். மெகா ஏலத்தில் ஹர்ஷலின் அதிர்ஷ்டம் மாறி இருந்த நிலையில், அவர் அடிப்படை விலையான ரூ.2 கோடியில் இருந்து ரூ.10.75 கோடிக்கு ஆர்சிபியால் வாங்கப்பட்டார். டெத் ஓவர்களில் படேல் மீண்டும் ஆர்சிபியின் கோ-டு மேன் ஆக இருக்கிறார்.
- மொஹ்சின் கான்
போட்டிகள்: 8, விக்கெட்டுகள்: 13, சராசரி: 13.23, எகானமி: 5.93
எட்டு ஆட்டங்களில் ஆறிற்கும் குறைவான எகானமி விகிதத்துடன் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய லக்னோ அணியின் மொஹ்சின் கான் ஐபிஎல் அடையாளப்படுத்தியுள்ள புதிய திறனாக இருக்கிறார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது தந்திரமான பந்துவீச்சால் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவருக்கு அவரின் வேகம், பந்துவீச்சு மாறுபாடு, மற்றும் இடது-கை வீரரின் கோணம் ஆகியவை மட்டும் உதவவில்லை. அவரது ஸ்மார்ட் கிரிக்கெட் புத்திசாலித்தனமும் அவருக்கு உதவி இருக்கிறது.
குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் கடைசி லீக் ஆட்டத்தில், மொஹ்சின் ஒரு சிறந்த 17வது ஓவரை வீசினார். மேலும் தனது புத்திசாலித்தனமான வேக மாற்றத்தின் மூலம் ஆண்ட்ரே ரஸ்ஸலை வீழ்த்தினார்.
- உம்ரான் மாலிக்
போட்டிகள்: 14, விக்கெட்டுகள்: 22, சராசரி: 20.18, எகானமி: 9.03
நடப்பு தொடரில் உம்ரான் மாலிக்கின் அபார வேகம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிச்சில் உறைய வைத்துள்ளது. அவரின் அதிகவேக பந்துகளில் பெரும்பாலானவை மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசப்படுகின்றன. மேலும், அதிவேக பந்துகளை வீசி அவரே அவரது முந்தைய சாதனைகளை முறியடித்து விடுகிறார்.
மைதானங்களில் ஆட்டங்களை பார்க்க வரும் ரசிகர்கள், 'உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சைப் பார்க்க நான் வந்தேன்' என்ற வாசகப் பலகைகளை கையில் ஏந்தியபடி உள்ளனர்.
சில ஆட்டங்களில் தனது அசாத்திய பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர், சரியான ரிதத்தில் இருக்கும்போது விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து விடுகிறார். மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோருக்கு துல்லியமான பந்துகளை வீசி ஸ்டம்ப்பை பதம் பார்க்க செய்து மூச்சுத் திணறல் வர செய்து விடுகிறார்.
என்னைக் கேட்டால் அவரின் முறையான மற்றும் சரியான ஐபிஎல் சீசன் இதுதான் என்பேன். ஆனால் அவர் நிச்சயமாக உலகெங்கிலும் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று உறுதியளிக்கிறார்.
12வது வீரராக ஆர் அஸ்வின்
போட்டிகள்: 14, விக்கெட்டுகள்: 11, சராசரி: 36.36, எகானமி: 7.14; ரன்கள்: 183, சராசரி: 30.50, ஸ்ட்ரைக் ரேட்: 146.40, அதிபட்ச ரன் (ஹைய் ஸ்கோர்): 50
முன்னொரு காலத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒயிட் பாலில் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்று கூறப்பட்டது. இருப்பினும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வலிமையிலிருந்து அதன் உச்சத்திற்குக்கே சென்று இருந்தார். தற்போது அவர் தன்னிடம் உள்ள ஒயிட் பால் வீரியம் குறையவில்லை என்று நிரூபித்து இருக்கிறார்.
நடப்பு தொடரில் சாஹலுடன் இணைந்த அஸ்வின் சுழலில் மாயாஜாலம் காட்டி நெருக்கடி கொடுத்ததோடு விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினார். ஆனால், அவரின் பெயரை அனைவரும் அசைபோட அவரது பேட்டிங் தான் முக்கிய காரணம். இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் அரைசதத்தை அடித்த அவர் தனது ஹாட்ரிக் அரைசதத்தையும் பதிவு செய்தார்.
அதோடு நின்று விடாமல், ரீடயர்டு விதியை மிகக்கச்சிதாமாக பயன்படுத்தி இருந்தார். இந்த விதி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இந்த சீசனில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிர, அஸ்வினின் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டம் (23 பந்துகளில் 40 ரன்கள்) ராஜஸ்தான் அணி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உதவியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.