IPL 2022 Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் அரங்கேறி வருகிறது. இதன் நேற்றைய 49வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசிய நிலையில், பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லோம்ரோர் 42 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து விளையாடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எனவே, பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலியை காலி செய்த மொயீன் அலி…
இந்த ஆட்டத்தில் பெங்களூரு சார்பில் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் – விராட் கோலி ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கேப்டன் டு பிளெசிஸ் மொயீன் அலி வீசிய 7.2 வது ஓவரில் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் ரன்-அவுட் ஆகி 3 ரன்னோடு நடையைக் கட்டினார். மறுமுனையில் இருந்த கோலி ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளை விரட்டி இருந்தார். அவர் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மொயீன் அலிவீசிய 9 வது ஓவரின் 5வது பந்தில் க்ளீன் போல்ட்-அவுட் ஆகி வெளியேறினார்.
புனே மைதானம் சுழலுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில், மொயீன் அலி அலி வீசிய பந்துகள் 5.7 டிகிரி, 6.5 டிகிரி, 7.0 டிகிரி என சுழன்றன. அவரின் பந்தை கவர் ட்ரைவ் செய்ய முயன்ற விராட் கோலி மொயீன் அலி விரித்த வலையில் சிக்கிக்கொண்டார். முன்னதாக மொயீன் அலி பந்தில் விராட் கோலி பவுண்டரியை விரட்டி இருந்தார். இதேபோல் அரோவுன்ட் விக்கெட்டில் வீசப்பட்ட அந்த பந்தையும் கோலி விரட்ட துடித்தார். ஆனால், மொயீன் அலி வீசிய பந்து 7.0 டிகிரி சுழன்று கோலிக்கு பின்புறம் இருந்த ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.


முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை மொயீன் அலி இப்படி தனது சுழல் வலையில் சிக்கவைத்தது இது முதல் முறை கிடையாது. கடந்த ஆண்டு சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடந்த இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்த டெக்னிக்கை மொயீன் அலி முயற்சித்து வெற்றி கண்டிருந்தார். அதையே நேற்றைய ஆட்டத்திலும் செயல்படுத்தினார்.

சென்னை டெஸ்ட்டின் போது ஆஃப் சைடில் வீரர்களை நிறுத்தாத இங்கிலாந்து அணியினர் அந்த பகுதியை காலியாக வைத்திருந்தனர். அப்போது களமாடி இருந்த முன்னாள் கேப்டன் கோலி ஆஃப் சைட் காலியாக உள்ளது என நினைத்து மட்டையை சுழற்றினார். அவருக்கு பந்துவீசிய மொயீன் அலியின் பந்து தளத்தில் பிட்ச் செய்த பிறகு கூர்மையாகத் திரும்பி ஆஃப்-ஸ்டம்பின் மேற்புறத்தைத் தட்டிச் சாய்த்தது.
பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆனா கோலியால் அங்கு அரங்கேறிய சம்பவத்தை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்திருந்த அவர் சில நிமிடங்களுக்கு அங்கேயே நின்று கொண்டிருந்தார். கள நடுவர்கள் ரிவ்யூவுக்கு சென்று இருந்தாலும், அது கோலிக்கு பயனளிக்கவில்லை. கோலிக்காகவே மொயீன் அலி விரித்திருந்த அந்த வலையில் வசமாக சிக்கிக்கொண்டார்.

முன்னதாக பேட்டிங் செய்ய களம் புகுந்த கோலி ஹெல்மெட் அணியாமல் தொப்பி மட்டும் அணிந்து வந்தார். அப்போது டிவியில் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இந்திய வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், கோலி தொப்பி அணிந்திருப்பதால் அவர் ஸ்வீப்-ஷாட் ஆட வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார். பள்ளமும், மேடுகளும் நிறைந்த சேப்பாக்க ஆடுகளத்தில் ஸ்வீப் ஆடுவது சற்றே ஆபத்தானது. சில நேரங்களில் எகிறி வரும் பந்துகள் பேட்ஸ்மேன்களின் முகத்தில் காயங்களை ஏற்படுத்தும்.
கோலி கவர் ட்ரைவ் ஆடுவதில் கில்லாடி. அவரது மணிக்கட்டு பேட்டை சுழற்றிய அடுத்த கணத்தில் பந்து பவுண்டரி கோட்டை தொட்டு விடும். இதை அறிந்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆஃப் சைட் பதிலாக லெக்சைடில் ஃபீல்டர்களை ஏற்றினார். காலியாக இருந்த ஆஃப்-சைட் பகுதி கோலிக்கு ரன் குவிக்கும் ஆசையை தூண்டியது. இதனால் அப்பகுதியில் பந்தை விரட்ட முயன்ற கோலி மொயீன் அலியின் மாயா வலையில் சிக்கி வெளியேறினார்.
Did You Watch – Spin and timber: Moeen Ali outfoxes Virat Kohli!
— IndianPremierLeague (@IPL) May 4, 2022
📽️📽️https://t.co/se3XczU06N #TATAIPL #RCBvCSK
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“