IPL 2023, Chennai Super Kings - MS Dhoni Tamil News: 10 அணிகள் களமாடி வரும் 16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இதுவரை நடந்த 4 போட்டிகளில் 2ல் வெற்றி, 2ல் தோல்வி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. சென்னை அணி அடுத்ததாக வருகிற திங்கள் கிழமை (ஏப்ரல் 17ம் தேதி) இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இதற்காக அணியில் உள்ள வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
ராக்கெட் வேகத்தில் எகிறும் வியூவர்ஷிப்
இந்நிலையில், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் எல்லாம் பரபரப்பாக அரங்கேறுவதால், அதை டி.வி மற்றும் டிஜிட்டல் தளங்களில் கண்டு களித்து வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
நடப்பு சீசனில் நடந்து வரும் போட்டிகளை டி.வி-யில் ஸ்டார் நெட்ஒர்க் சேனல்களும், ஓ.டி.டி தளத்தில், அதாவது டிஜிட்டலில் வையாகாம் 18-இன் 'ஜியோ சினிமா' ஆப்-பும் நேரலையில் ஒளிபரப்பி வருகின்றன. இதில், டிஜிட்டலில் ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்த முகேஷ் அம்பானியின் வையாகாம் 18 நிறுவனம், போட்டிகளை நேரலையில் இலவசமாக பார்க்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இது கிரிக்கெட் போட்டிகளை டிஜிட்டலில் பார்க்க வரும் ரசிகர்களை அதிகரிக்க செய்துள்ளது.
இதேபோல், சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டி.வி ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய டிஸ்னி - ஸ்டார் நிறுவனம், ஐ.பி.எல் 2023ல் முதல் 10 போட்டிகளுக்கு 300 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது என்றும், போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே போட்டியை மட்டும் 56 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர் என்றும் கூறியுள்ளது.
இதுஒருபுறம் இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 தொடர் வெற்றிகள், பரபரப்பின் உச்சத்திற்கே செல்லும் ஆட்டம் மற்றும் கடைசி ஓவர்களில் கேப்டன் தோனியின் சிக்ஸர் மழை போன்ற காரணிகளாலும் டி.வி மற்றும் ஜியோ சினிமாவின் வியூவர்ஷிப் போட்டிக்குப் போட்டி புதிய உயரத்தை எட்டி வருகிறது.
ஜியோ சினிமாவின் வியூவர்ஷிப்பை பொறுத்தவரை, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான சென்னையின் தொடக்க ஆட்டத்திற்கு 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அதுவே, கடைசியாக சென்னை மண்ணில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்திற்கு 22 மில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 176 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தியது.
ஒரு கட்டத்தில் சென்னை தோல்வியைத் தழுவும் என ரசிகர்கள் நினைத்த தருணத்தில், களத்தில் இருந்த கேப்டன் தோனி - ஜடேஜா ஜோடி பவுண்டரி, சிக்ஸர்களை மாறி மாறி விளாசி ஆட்டத்தில் பரபரப்பை கொண்டு வந்தனர். சென்னையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்போது ஸ்ட்ரைக்கில் தோனி இருக்க சந்தீப் சர்மா பந்துகளை வீசினார். அதீத அழுத்தத்தில் இருந்த அவர் முதல் பந்தில் 2 ஒயிடு வீசினார். ஆனால், அடுத்த பந்தில் காம்பேக் கொடுத்தார்.
எனினும், 2வது மற்றும் 3வது பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டு மிரட்டினார் தோனி. அதேநேரத்தில் ஜியோவின் ஆப்-பில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மளமளவென உயரத் தொடங்கியது. 4வது பந்தில் தோனி ஒரு ரன், 5வது பந்தில் ஜடேஜா ஒரு ரன் என எடுக்க, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. தோனி மீண்டுமொரு சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதனை தவற விட்டார். இதனால், ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இப்படி, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வரும் சென்னை அணியின் ஆட்டத்தால் டி.வி மற்றும் டிஜிட்டல் தளத்தின் வியூவர்ஷிப் அதிகரித்து வருகிறது.
ஐபிஎல் 2023 - டிஜிட்டல் தளத்தில் அதிக பார்வையாளர்கள் பெற்ற போட்டிகள் பின்வருமாறு:-
- 22 மில்லியன்: சென்னை சூப்பர் கிங்ஸ் v ராஜஸ்தான் ராயல்ஸ்
- 18 மில்லியன்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் v லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
- 17 மில்லியன்: சென்னை சூப்பர் கிங்ஸ் v லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
- 17 மில்லியன்: மும்பை இந்தியன்ஸ் v டெல்லி கேபிடல்ஸ்
- 16 மில்லியன்: சென்னை சூப்பர் கிங்ஸ் v குஜராத் டைட்டன்ஸ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.