IPL 2023 playoffs equation in tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு தொடங்கிய55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, 168 ரன்கள் வெற்றி கொண்ட இலக்கை துரத்திய டெல்லி அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
மும்பை – சென்னை – பெங்களூரு – டெல்லி அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பு
மும்பை
நடப்பு சீசனின் கடைசி மூன்று ஆட்டங்களில் மும்பை வெற்றி பெற்றால், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற முடியும். மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியை வருகிற வெள்ளிக்கிழமை வான்கடேயில் சந்திக்கிறது. பின்னர் செவ்வாய்க்கிழமை ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது.
தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை மே 21 அன்று சொந்த மண்ணில் விளையாடுகிறது. பிளேஆஃப்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க மும்பை அவர்களின் நெட் ரன்ரேட்டை (-0.255) அதிகரிக்க வேண்டும்.
பெங்களூரு
பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை அவர்களின் வெளி ஆட்டங்களில் தோற்கடிக்க வேண்டும். அதோடு, சொந்த மைதானத்தில் நடக்கும் இறுதி லீக் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்த வேண்டும்.
மும்பைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி கண்ட நிலையில், எஞ்சிய போட்டிகளில் பெங்களூரு ஒரு தோல்வியைக் கூட பெறக் கூடாது. தற்போது பெங்களுரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
சென்னை
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுள்ள சென்னை புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னையில்) மற்றும் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் (டெல்லியில்) அணிகளை சந்திக்கிறது. இந்த போட்டிகளிலும் வெற்றியை ருசித்தால் சென்னை அணி டாப் 2 இடத்தில் இருக்கும்
டெல்லி
நேற்று புதன்கிழமை சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு எதிராக தோல்வியுற்ற டெல்லி அணிக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன. அந்த அணி பிளேஆஃப் போட்டியில் நீடிக்க, கடைசி 3 போட்டிகளில் மூன்றிலுமே வெற்றி பெற்றாக வேண்டும். டெல்லி அணி மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் முடிவடையும். அந்த அணியின் நெட் ரன்ரேட் -0.529 மிக மோசமான நிலையில் உள்ளது. எனினும், இந்த சீசனில் மற்ற போட்டிகளின் முடிவுகள் டெல்லிக்கு சாதகமாக இருந்தால், அந்த அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பெறலாம்.
பிளேஆஃப் நடக்கும் இடங்கள்
ஐபிஎல் 2023 தொடரின் பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. தகுதிச் சுற்று 1 மே 23-ஆம் தேதி எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும், அதைத் தொடர்ந்து மே 24-ஆம் தேதி எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறும்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் வென்ற இறுதிப் போட்டியும் இதே மைதானத்தில்தான் நடந்தது என்பது குறிபிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil