10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்தார். அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 135 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் கான்வே அரைசதம் விளாசி 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்தார். இறுதியில், சென்னை அணி 18.4 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது. இதனால், சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
Another good roar! 🤜💛🤛#WhistlePodu #Yellove #CSKvSRH 🦁 pic.twitter.com/4FVe9zzpoP
— Chennai Super Kings (@ChennaiIPL) April 21, 2023
3வது இடத்தில் சென்னை
சென்னை அணி அசத்தல் வெற்றியை ருசித்து இருந்தாலும், 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அதே 3வது இடத்தில் தான் உள்ளது. முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் 8 புள்ளிகள் மற்றும் +1.043 ரன் ரேட்டுடனும், 2வது இடத்தில் உள்ள லக்னோ 8 புள்ளிகள் மற்றும் +0.709 ரன் ரேட்டுடனும் உள்ளன. அதேநேரத்தில், சென்னை அணி +0.355 ரன் ரேட்டுடன் 3வது இடத்தில் உள்ளது.
ஆரஞ்சு - பர்பிள் கேப்
நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு கேப் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் (343 ரன்கள்) வசமும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர்களுக்கான பர்பிள் கேப் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (12 விக்கெட்டுகள்) வசமும் உள்ளன.
இன்றைய போட்டி
இன்று மாலை 3:30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும் 30வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கும் 31வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
நாளைய போட்டி
நாளை ஞாயிற்றுகிழமை மாலை 3:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கும் 32வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கும் 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.