Advertisment

ஐ.பி.எல் 2023 இதுவரை: எதிர்கால இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் 3 இளம் வீரர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சன் நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
IPL 2023, Ruturaj Gaikwad, Tilak Verma, Sai Sudarshan India’s future Tamil News

India’s future cricketers Ruturaj Gaikwad, Tilak Verma, Sai Sudarshan - IPL 2023 Tamil News

IPL 2023, Ruturaj Gaikwad, Tilak Verma, Sai Sudarshan India’s future Tamil News: இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் பல முன்னணி வீரர்களை அடையாளப்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. இந்த வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய அணியில் அறிமுகமாகவும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனை படைக்கவும் அடித்தளமாகவும் இருந்து வருகிறது. அவ்வகையில், ஐ.பி.எல் தொடரில் ஜொலித்ததன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான பல வீரர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். அவர்களில் சூரியகுமார் யாதவ், சுப்மான் கில், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் நம் கண்முன் இருக்கும் உதாரணம்.

Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தாலும், அவரது திறமையை நிரூபிப்பதற்கான போதிய போட்டிகள் வழங்கப்படவில்லை. 2021 சீசனுக்குப் பிறகு மீண்டும் இந்த சீசனிலும் அவர் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இதேபோல், மும்பை இந்தியன்ஸின் திலக் வர்மா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் போன்ற வீரர்களும் எதிர்கால இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் இளம் வீரர்களாக உள்ளனர்.

சாய் சுதர்சன்

publive-image

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சன் (21) நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார். டெல்லிக்கு எதிரான அவரது ஆட்டம், யார் இந்த சுதர்சன்? என பலரையும் தேட வைத்தது. அந்த ஆட்டத்தில் குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், 3வது வீரராக களமாடிய சுதர்சன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ரன்களை சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே மற்றும் குல்தீப் யாதவ் போன்ற மிரட்டல் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளித்த அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.

மேலும், 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து, குஜராத் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க உதவினார். சாய் சுதர்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தை பார்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, லீக் மற்றும் இந்திய கிரிக்கெட்டில் அவர் இதைவிட சிறப்பான சம்பவங்களை செய்வார்' என்று புகழாரம் சூட்டினார். அதோடு, பல முன்னாள் வீரர்களும் அவரது ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டனர்.

publive-image

தமிழக அணியில் விளையாடி வரும் சுதர்சன், 2022-23ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே டிராபியில் மூன்று சதங்களுடன் 610 ரன்கள் எடுத்தார். (தமிழக வீரர் என் ஜெகதீசன் 830 ரன்கள், மற்றும் மகாராஷ்டிராவின் ருதுராஜ் கெய்க்வாட் 660 ரன்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக 3வது அதிக ரன்கள் வீரர்), சையத் முஷ்டாக் அலி டிராபியில் 28.33 சராசரியில் 170 ரன்களும், ரஞ்சி டிராபியில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 47.66 சராசரியில் 572 ரன்களும் எடுத்த வீரராக உள்ளார்.

திலக் வர்மா

மற்றொரு அற்புதமான இடது கை பேட்டிங் திறமை கொண்ட இளம் வீரராக ஐதராபாத்தை சேர்ந்த 20 வயதான திலக் வர்மா இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தாலும், இவரது மிரட்டலான ஆட்டம் பலரையும் கவனம் ஈர்த்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தபோதும், மறுமுனையில் இருந்த திலக் வர்மா தனக்கே உரித்தான பாணியில் பேட்டிங் செய்தார். மிகச் சரியான ஷாட்டுகளை தேர்வு செய்து ரன்களை குவித்தார்.

பெங்களுருவில் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் போன்ற ஒருவருக்கு எதிராக நம்பிக்கையுடன் தனது ஷாட்களை சிறப்பாக விளையாடினார். 46 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்த அவர் மும்பை அணி 171 ரன்கள் கொண்ட இலக்கை நிர்ணயிக்க உதவினார். அறிமுக வீரர்களான நேஹால் வதேரா மற்றும் அர்ஷத் கான் ஆகியோருடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். அதேபோல், அனுபவமிக்க வீரரைப் போல் மட்டையை சுழற்றி அசத்தினார்.

publive-image

கடந்த சீசனில் மும்பை அணியில் அறிமுகமான திலக் வர்மா பெரும்பாலும் 4 மற்றும் 5வது இடத்தில் பேட்டிங் செய்தார். அந்த அணியில் இஷான் கிஷானுக்குப் (418 ரன்கள்) பின் 397 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன்களை எடுத்த வீராகவும் இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 131.02 ஆகவும் இருந்து. உள்நாட்டு போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக 402 ரன்களைக் குவித்துள்ளார். விஜய் ஹசாரே டிராபியில் இரண்டு சதங்கள் மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் 4 அரை சதங்களுடன் 297 ரன்கள் எடுத்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான 26 வயதான ருதுராஜ் கெய்க்வாட், 2021 சீசனுக்குப் பிறகு இந்த சீசனில் சிறப்பான தொடக்க கிடைத்துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 92 ரன்கள், லக்னோவுக்கு எதிரான 2வது ஆட்டத்தில் 52 ரன்கள் மிரட்டல் அடி அடித்து வருகிறார். லக்னோவுக்கு எதிராக சென்னை மண்ணில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். அந்த சிக்ஸர்களில் சிலவற்றை அவர் சிரமமில்லாமல் விளாசியது போல் இருந்தது.

publive-image

ருதுராஜ் ஏற்கனவே இந்தியாவுக்காக அறிமுகமாகி இருந்தாலும், (ஐந்து தொடர்களில் 10 போட்டிகள் - 1 ஒருநாள், 9 டி20) அவரது திறனை மேலும் வெளிப்படுத்த அவருக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு சில வாய்ப்புகள் சரியான நேரத்தில் கிடைத்த போதும், அவர் அதை சரியாக பயன்படுத்தவில்லை. எனினும், தற்போது தரமான ஃபார்மில் இருக்கும் அவரை இந்திய அணி நிர்வாகம் சரியாக பயன்படுத்த வேண்டும். அவர் எல்லா வடிவ கிரிக்கெட்டுக்கும் ஏற்றவராக தன்னை மாற்றிக் கொள்கிறார்.

publive-image

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இருந்து ரெட்-பால் போட்டிகளுக்கு அட்ஜஸ்ட் செய்யும் அளவுக்கு அவரிடம் திறமைகள் குவிந்துள்ளன. அதை அவர் விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியதில் இருந்து நாம் பார்த்தோம். தவிர, ஈரமான ஆடுகளங்களிலும், சதுரமாக மாறும் ஆடுகளங்களிலும் கூட, அவர் தன்னை நிரூபித்துள்ளார். அதனால், அவருக்கான நீண்ட ஓட்டம் வழங்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கப்படும் பட்சத்தில், அவர் நிச்சயம் எதிர்கால இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் வீரராக ஜொலிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Gujarat Titans Mumbai Indians Ruturaj Gaikwad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment