IPL broadcast rights Tamil News: கடந்த 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த இத்தொடர் படிப்படியாக உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால், இத்தொடரை ரசிப்பவர்கள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தற்போது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்,
ஐபிஎல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்ற ஒவ்வொரு முறையும் கடும் போட்டி நிலவுகிறது. இத்தொடரை முதல் 10 ஆண்டுகளில் ஒளிபரப்பு செய்ய சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.8200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா, டிஷ்னி நிறுவனம் ஆகியவை தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை அப்போது நடந்த ஏலத்தில் கைப்பற்றின.
இந்நிலையில், தற்போது முதல் முறையாக 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது. ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை, (அதாவது முதல் போட்டி, 4 ப்ளே ஆஃப், டபுள் ஹெட்டர் போட்டிகள் அடங்கும்) உலக நாடுகளுக்கான ஒளிரபப்பு உரிமை என 4 பிரிவுகளில் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
மும்பையில் நேற்று காலை 11 மணியளவில் மின்னணு ஏலம் தொடங்கிய நிலையில், ஏலத்துக்கான டெண்டர் விண்ணப்பம் வாங்கி, அவற்றை சமர்ப்பித்த தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் இணைப்பை வழங்கினர்.
நேற்று முதல்நாள் ஏல முடிவில் இந்த ஒளிபரப்பு உரிமை ரூ.43 ஆயிரம் கோடியை எட்டியது. அதாவது 4 பிரிவுகளில் 2 பிரிவுகளுக்கான ஏலம் மட்டுமே நேற்று முடிந்தது. "பேக்கேஜ் 1" சுமார் ரூ 23, 370 கோடி ரூபாய்க்கும் , "பேக்கேஜ் 2" ரூ. 19, 680 கோடிக்கும் ஏலம் ஆனாது. அதே நேரத்தில் இந்த இரண்டு ஏலத்திலும் வெற்றி பெற்ற நிறுவனம் எது என்ற தகவல் வெளியாகவில்லை. இன்னும் இரண்டு பிரிவுகளின் ஏலம் மீதம் இருப்பதால் மொத்த வருவாய் சுமார் 60 ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமக்கு கிடைத்துள்ள தரவுகளின் படி, டிவி உரிமை ஏலம் ஒரு ஆட்டத்திற்கு ரூ.57 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.48 கோடிக்கும் ஏலம் போனது. இவற்றை ஒன்றாக எடுத்துக்கொண்டால், ஐபிஎல் 2023-2027 சுழற்சியின் ஒரு விளையாட்டின் மீடியா உரிமை மதிப்பு ரூ. 105 கோடியாகும். மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு ரூ. 43,050 கோடி. இது பிசிசிஐயின் அடிப்படை விலையான ரூ.32,890 கோடியில் இருந்து ரூ.10,160 கோடி அதிகரித்துள்ளது.
முதல்நாள் ஏலம் குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், "நாள் முன்னேறிய விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அனைத்து ஏலதாரர்களும் மிகுந்த ஆர்வம் காட்டுவது சிறந்த பகுதியாகும். ஏலம் ஐபிஎல்லுக்குத் தகுதியான எண்ணிக்கையை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இரண்டாவது நாள் அனைத்து பங்குதாரர்களுக்கும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில், ஸ்டார் இந்தியா நிறுவனம் 2018-2022 ஒளிபரப்பு உரிமையை ரூ. 16,347.5 கோடிக்கு ஏலத்தில் பெற்றபோது, நிறுவனம் ஒரு விளையாட்டுக்கு ரூ.54.5 கோடி செலுத்துவதாக உறுதியளித்தது. இம்முறை, ஒரு விளையாட்டின் அடிப்படையில் ஏலம் எடுக்கப்படுகிறது. மேலும் ஒரு போட்டிக்கான அடிப்படை விலைகள் முறையே பேக்கேஜ் எ ரூ.49 கோடி மற்றும் பேக்கேஜ் பி ரூ.33 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் உரிமைகள் மதிப்பின் முன்னேற்றம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இது பெரும்பாலும் கிரிக்கெட் வாரியத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஃபேஸ்புக் ரூ. 3,900 கோடியுடன் அதிக டிஜிட்டல் உரிமை ஏலத்தில் இருந்தது. இது ஒரு விளையாட்டுக்கு சுமார் ரூ.13 கோடியாகும். அமெரிக்க டாலர்களாக மாற்றப்பட்டால், முதல் நாள் ஏலத்திற்குப் பிறகு ஐபிஎல்லின் ஒரு ஆட்ட மதிப்பு சுமார் $13.43 மில்லியனாக உள்ளது. இது ஏற்கனவே இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை முறியடித்துள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்கள் ஒரு போட்டிக்கு $11 மில்லியன் செலுத்துகின்றனர்.
ஏலத்திற்கு முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் பிரீமியர் லீக்கைத் தாண்டி உலகின் நம்பர் 2 ஸ்போர்ட்ஸ் லீக் ஆக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"தற்போது, ஒரு தேசிய கால்பந்து லீக் (NFL) விளையாட்டு ஒளிபரப்பு செய்பவருக்கு சுமார் $17 மில்லியன் செலவாகும். இது எந்த விளையாட்டு லீக்கிற்கும் அதிகமாகும். அதைத் தொடர்ந்து இங்கிலீஷ் பிரீமியர் லீக், $11 மில்லியன் மற்றும் மேஜர் லீக் பேஸ்பால் எண்ணிக்கையும் ஏறக்குறைய அதேதான். கடந்த ஐந்தாண்டு சுழற்சியில், ஒரு ஐபிஎல் விளையாட்டின் மூலம் $9 மில்லியன் பெற்றோம். இந்த முறை, நாங்கள் நிர்ணயித்த குறைந்தபட்ச அடிப்படை விலையின்படி, ஒரு ஐபிஎல் போட்டிக்கு பிசிசிஐ $ 12 மில்லியனைப் பெறும்,” என்று ஷா கூறியிருந்தார்.
இந்திய தலைமைத்துவ கவுன்சில் நிகழ்வில் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “என்னைப் போன்ற வீரர்கள் சில சதங்கள் சம்பாதித்து, இப்போது கோடிகளை சம்பாதிக்கும் திறன் கொண்ட விளையாட்டு வளர்ச்சியடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். இந்த விளையாட்டு ரசிகர்களால், இந்நாட்டு மக்களால், கிரிக்கெட் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பிசிசிஐயால் நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டு வலுவானது மற்றும் தொடர்ந்து உருவாகும். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை விட ஐபிஎல் அதிக வருவாய் ஈட்டுகிறது. நான் விரும்பும் விளையாட்டு மிகவும் வலுவாக வளர்ந்தது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது." என்று தெரிவித்தார்.
ஏலத்திற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவு இல்லாமல், மின்-ஏலம் நீண்ட நாட்களுக்கு இழுக்கப்படும் செயல்முறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏல வெற்றியாளர் இன்று திங்கள் மாலை அல்லது நாளை செவ்வாய்கிழமை அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.