IPL broadcasting rights Tamil News: ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுக்கு (2023 முதல் 2027-ம் ஆண்டு வரை) டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் வழங்குவதற்கான மின்னணு ஏலம் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சுமார் 48,390 கோடியை ஈட்டியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த மின்னணு ஏலத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. முன்னர் எதிர்பார்த்தபடியே இம்முறையும் ஐ.பி.எல். ‘மதிப்பு’ தாறுமாறாக எகிறியது.
ஏலம் ஒரு விளையாட்டின் அடிப்படையில் செய்யப்பட்டது. அதாவது அடுத்த ஐந்தாண்டு டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமையை வைத்திருப்பவர்கள் ஒரு போட்டிக்கு ரூ.118.02 கோடியை கிரிக்கெட் வாரியத்திற்குச் செலுத்துவார்கள். தற்போது, ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் 74 போட்டிகள் நடைபெறுவதால், எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. ஐந்தாண்டு காலத்தில் மொத்த எண்ணிக்கை 410 ஆக இருக்கும்.
டிஸ்னி-ஸ்டார் நிறுவனம் இந்திய துணைக்கண்டத்திற்கான டிவி உரிமையை (பேக்கேஜ் ஏ) ரூ.23,575 கோடிக்கு வாங்கியது. பேக்கேஜ் பி மற்றும் பேக்கேஜ் சி-யை வியாகாம் 18 நிறுவனம் ரூ. 23,758 கோடிக்கு வாங்கியுள்ளது. பேக்கேஜ் பி என்பது இந்திய துணைக்கண்டத்திற்கான டிஜிட்டல் உரிமைகளை உள்ளடக்கியது. பேக்கேஜ் சி என்பது அதே பிராந்தியத்திற்கான பிரத்தியேக டிஜிட்டல் உரிமைகளுடன் ஒரு சீசனுக்கு 18 போட்டிகள் கொண்ட சிறப்பு தொகுப்பு ஆகும்.
பேக்கேஜ் பி -யை ஒரு நிறுவனமும், பேக்கேஜ் சி-யை ஒரு நிறுவனமும் கைப்பற்றினால் ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்படும். அதிலும் பேக்கேஜ் சி-யானது ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம், பிளே-ஆப், இறுதிப்போட்டி உள்பட குறிப்பிட்ட 18 ஆட்டங்களுக்குரிய இந்திய துணை கண்டத்துக்கான பிரத்யேக டிஜிட்டல் உரிமம் ஆகும். எனவே ஏலத்தின் போது சுதாரித்து கொண்ட வியாகாம் 18 நிறுவனம் அந்த இரண்டு பேக்கேஜ்களையும் கைப்பற்றி விட்டது. ஆனால், பேக்கேஜ் முறையில் இப்படி ஒரு செக் வைத்து உரிமைத்தை விற்று கள்ளா கட்டியுள்ளது பிசிசிஐ.
கடைசி பிரிவான (பேக்கேஜ் டி) எஞ்சிய உலக நாடுகளுக்கான டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமத்தை வியாகாம் 18 மற்றும் டைம்ஸ் நிறுவங்கள் ரூ.1,057 கோடிக்கு பகிர்ந்துள்ளன. இவையனைத்தையும் எண்களாக குறிப்பிட்டோமானால், ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுக்கு (2023 முதல் 2027-ம் ஆண்டு வரை) டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் இரண்டையும் சேர்த்து ரூ.16,347.5 கோடிக்கு ஒரு போட்டிக்கு ரூ.54.5 கோடி செலுத்தி ஸ்டார் இந்தியா ஏலத்தில் வென்றுள்ளது.
இந்த முறை, ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகள் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்து, டிஜிட்டல் முக்கிய அங்கமாக மாறி இருந்தது. ஒருங்கிணைந்த அடிப்படை விலையை ரூ.32,890 கோடியாக நிர்ணயித்த பிறகு, பிசிசிஐ ரூ.45,000 கோடிக்கு மேல் ஏலம் செல்லும் என்று எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பார்த்ததை அதிமாகவே பிசிசிஐக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் பிரிவில் பிசிசிஐ கணித்த எண்ணை தாண்டியது.
“இந்தியா ஒரு டிஜிட்டல் புரட்சியைக் கண்டுள்ளது மற்றும் இந்தத் துறைக்கு முடிவில்லா ஆற்றல் உள்ளது. டிஜிட்டல் நிலப்பரப்பு கிரிக்கெட் பார்க்கும் முறையை மாற்றிவிட்டது. இது விளையாட்டின் வளர்ச்சிக்கும் டிஜிட்டல் இந்தியா பார்வைக்கும் ஒரு பெரிய காரணியாக இருந்தது,” என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மின்-ஏலத்திற்குப் பிறகு ட்வீட் செய்துள்ளார்.
Iam thrilled to announce that STAR INDIA wins India
— Jay Shah (@JayShah) June 14, 2022
TV rights with their bid of Rs 23,575 crores. The bid is a direct testimony to the BCCI’s organizational capabilities despite two pandemic years.
இந்த ஆண்டு MICA அகமதாபாத் வெளியிட்ட இந்தியன் ஓவர்-தி-டாப் (OTT) பிளாட்ஃபார்ம்கள் அறிக்கை 2021 (தொற்றுக்குப் பிந்தைய நுகர்வு) இன் நான்காவது பதிப்பு, டிஜிட்டல் சந்தாக்கள் 49 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 15-34 வயதிற்குட்பட்ட பார்வையாளர்களிடையே நுகர்வு அதிகமாக இருந்தது – ஐபிஎல்-ன் தீவிர ரசிகர் பட்டாளத்தை பூர்த்தி செய்யும் வயதுக் குழு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்த பெருமை டிஸ்னி-ஹாட்ஸ்டார்யே சாரும். அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான உதய் ஷங்கர் கடந்த 2017ல் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை பெறுவதில் படுமும்முரம் காட்டினார். அதையே இம்முறை வியாகாம் 18 நிறுவனத்திற்காக செய்துள்ளார் ஷங்கர். அவர் தந்திரவாதியாக செயல்பட்டு ஏலத்தை முடித்து வைத்துள்ளார். ஸ்டார் நிறுவனம் மிகவும் ஆக்ரோஷமான ஏலத்தில் களமாடியதாக அறியப்படுகிறது.
“ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருவாயை அடிமட்டத்தில் இருந்து தொடங்கி நமது உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், இந்தியா முழுவதும் வசதிகளை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை வளப்படுத்தவும் பிசிசிஐ பயன்படுத்தும்” என்று ஷா பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் “இப்போது, மாநில சங்கங்கள், ஐபிஎல் உரிமையாளர்கள் ஐபிஎல் உடன் இணைந்து ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எங்களின் மிகப்பெரிய பங்குதாரரான ‘கிரிக்கெட் ரசிகன்’ உலகத்தரம் வாய்ந்த வசதிகளில் உயர்தர கிரிக்கெட்டை நன்கு கவனித்து, அனுபவிப்பதை உறுதிசெய்யும் நேரம் இது.” என்று தெரிவித்து இருந்தார்.
பிசிசிஐ ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 900 பணியாளர்கள் பயனடைவார்கள். இந்த திட்டம் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏலத்திற்கு முன், ஐபிஎல்லின் அடுத்த 5 ஆண்டுக்கான ஒரு ஆட்டத்தின் மதிப்பு இங்கிலீஷ் பிரீமியர் லீக்கைத் தள்ளி, தேசிய கால்பந்து லீக்கிற்கு (NFL) பின் உலகின் நம்பர் 2 ஸ்போர்ட்ஸ் லீக்கை உருவாக்கும் என்று தெரிவித்திருந்தது. அங்கு ஒளிபரப்பாளர்கள் ஒரு போட்டிக்கு 11 மில்லியன் டாலர்கள் செலுத்துகிறார்கள். ஆனால் நேற்றை ஏல முடிவில் ஒரு ஆட்டத்திற்கு 15.1 மில்லியன் டாலர்களை ஐபிஎல் பிரீமியர் லீக் ஒளிபரப்பாளர்கள் செலுத்த இருக்கிறார்கள். ஷா இதை “இந்திய கிரிக்கெட்டின் சிவப்பு எழுத்து நாள்” என்று அழைத்திருந்தார்.
ஆனால் சுமார் 10 நாடுகளில் கிரிக்கெட் ஒரு வணிக முன்மொழிவாக தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதால், பெரிய கேள்வி என்னவென்றால்: பணத்தை திரும்பப் பெறுவது ஒரு பிரச்சனையாக இருக்குமா? என்பது தான்.
“தற்போதைய விளம்பரதாரர்களில் 60 சதவீதம் பேர் ஸ்டார்ட்-அப்களாகவும், உலகளாவிய நிதியுதவியின் முடக்கப்பட்ட மனநிலையுடனும் இருப்பதால், ஒப்பந்தக் காலத்தின் தொடக்கத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முதலீட்டை மீட்டெடுப்பது ஒளிபரப்பாளர்களுக்கு எளிதாக இருக்காது…(அவர்கள்) ஒரு கடினமான காலகட்டத்தை கடக்க வேண்டும்,” என சமூக பங்கா சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்தல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹிமான்ஷு அரோரா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ஐபிஎல் உரிமையாளரின் நிர்வாகியின் கூற்றுப்படி, ஒளிபரப்பு உரிமைகள் வருவாயில் அபரிமிதமான வளர்ச்சியானது அணியின் பர்ஸை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, 95 கோடியாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 100 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்ட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil