16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 32-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியில் கேப்டன் டூபிளசிஸ் விராட்கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராஜஸ்தான் அணிக்காக முதல் ஓவரை வீசிய டிராட் போல்ட் முதல் பந்திலேயே விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்தி பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷபாஸ் அகமது 2 ரன்களில் வெளியேறினார்.
இதனால் பெங்களூர் அணி 12 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேக்ஸ்வெல் கேப்டன் டூபிளசியுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக பெங்களூர் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்த நிலையில், இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்து அசத்தியது.
அதிரடியாக விளையாடி இந்த தொடரில் 5-வது அரைசதத்தை பதிவு செய்த கேப்டன் டூபிளசிஸ், 39 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 62 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேகஸ்வெல் 44 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். அதன்பிறகு் லேமரர் 8 ரன்களில் வீழ்ந்தார்.
சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்துள்ளது. வில்லி 4 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில், போல்ட், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் சஹல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் பேட்டிங்
ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினார். பட்லர் முதல் ஓவரிலே டக் அவுட் ஆகி வெளியேறினார். அவர் சிராஜ் பந்தில் போல்டானார். அடுத்து தேவ்தத் படிக்கல் களமிறங்கி, ஜெய்ஷ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். இருவரும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி பெங்களூரு பந்துவீச்சை நொறுக்கினார். சிறப்பாக விளையாடி படிக்கல் அரைசதம் விளாசினார். ராஜஸ்தான் அணி 99 ரன்கள் எடுத்திருந்தப்போது, படிக்கல் 52 ரன்களில் அவுட் ஆனார். 34 பந்துகளைச் சந்தித்த படிக்கல், ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனை சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் 47 ரன்களில் அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். அடுத்ததாக ஹெட்மயர் களமிறங்கினார். இந்தநிலையில் 22 ரன்களில் சாம்சன் அவுட் ஆனார். இதனையடுத்து துருவ் களமிறங்கி அதிரடியாக ஆடினார். ஆனால் மறுமுனையில் ஆடி வந்த் ஹெட்மயர் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து அஸ்வின் களமிறங்கினார். இந்தநிலையில் ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 2 பவுண்டரிகள் அடித்த அஸ்வின் 4 ஆவது பந்தில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பாசித் 1 ரன் எடுக்க ராஜஸ்தான் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மறுமுனையில் ஆடி வந்த துருவ் 16 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார்.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்களையும், சிராஜ் மற்றும் டேவிட் வில்லி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil