16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று இரவு 7:30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் 21வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் வீரர்கள்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கே.எல் ராகுல்(கேப்டன்), கைல் மையர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், மார்க் வூட், ரவி பிஷ்னோய்
பஞ்சாப் கிங்ஸ்
அதர்வா டைடே, மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, சிக்கந்தர் ராசா, சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
லக்னோ பேட்டிங்
லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் கைல் மையர்ஸ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது. 3 சிக்சர்கள் விளாசிய மையர்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய குருனால் பாண்டியா சிறிது நேரம் தாக்கு பிடித்து 18 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் டக் அவுட் ஆனார்.
அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கிய நிலையில், ராகுல் அரை சதம் அடித்தார். ஸ்டாய்னிஸ் 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து படோனி களமிறங்கிய நிலையில், சிறப்பாக ஆடி வந்த ராகுல் 74 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கிருஷ்ணப்பா 1 ரன்னிலும், யுத்வீர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். இந்தநிலையில் லக்னோ அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்களையும், ரபாடா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பஞ்சாப் பேட்டிங்
பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிராப்சிம்ரன் 4 ரன்களில் வெளியேறினார். இருவரது விக்கெட்களையும் யுத்வீர் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்த மேத்யூ மற்றும் ஹர்பிரீத் ஜோடி சேர்ந்தனர். ஹர்பிரீத் நிதானம் காட்ட, மேத்யூ அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய மேத்யூ 34 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்ததாக சிக்கந்தர் ராஸா களமிறங்கி அதிரடியாக ரன் குவித்தார். இதற்கிடையில் 22 ரன்களில் ஹர்பிரீத் அவுட் ஆனார். அடுத்து வந்த சாம் கரன் 6 ரன்களிலும், ஜிதேஷ் ஷர்மா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 122 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் சிக்கந்தர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். ஷாரூக் கான் அவருக்கு சிறப்பாக கம்பெனி கொடுத்தார். சிறப்பாக ஆடி வந்த சிக்கந்தர் 57 ரன்களில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஹர்பீரித் 6 ரன்களில் அவுட் ஆனார்.
ரபாடா களமிறங்கிய நிலையில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. ஷாரூக் கான் 2,2,4 என அடித்து பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். பஞ்சாப் அணி 19.3 ஓவரில் 8 விக்கெட்களையும் 161 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் யுத்வீர், மார்க் உட், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதன்மூலம் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது.
லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. அந்த அணியில் ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இருப்பினும் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் தீபக் ஹூடாவின் ஃபார்ம் மட்டுமே அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடைசி 3 ஆட்டங்களில் ரன் சேர்க்க திணறி வரும் கைல் மேயர்ஸ் நீக்கப்பட்டு டி காக் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
லக்னோ அணியில் மார்க் வுட், ஆவேஷ் கான் மற்றும் உனாத்கட் சிறப்பாக பந்துவீசினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களின் தவறுகள் வெளியில் தெரியாத வகையில் அமித் மிஸ்ரா மற்றும் ரவி பிஷ்னாய் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.
மறுபுறம், பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றி, 2ல் தோல்வி என புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் பஞ்சாப் அணி தங்களது பேட்டிங் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த இரு போட்டிகளில் சொதப்பிய ராஜபக்சே நீக்கப்பட்டு லிவிங்ஸ்டன் இந்தப் போட்டியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங், ரபாடா, ராகுல் சஹர், சாம் கரண், ஹர்பிரீத் பரார் ஆகியோர் மிரட்டி வருகின்றனர்.
ஆடுகளம் எப்படி?
லக்னோ மைதானத்தின் சிவப்பு மண் பிட்ச்சில் ஆட்டம் நடக்கவுள்ளதால், ஹை ஸ்கோரிங் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ மைதானத்தில் தன்மை கிட்டத்தட்ட மொஹாலி மைதானத்தின் தன்மை போலவே இருக்கும். இதனால் சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் விளையாடினார். பின்னர் லக்னோ அணியின் அழைப்பால், பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறினார். எனவே, பஞ்சாப் - லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.