IPL 2023, Chennai Super Kings – MS Dhoni – Rajinikanth Tamil News: 10 அணிகள் காலமாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக சென்னை அணி வருகிற வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதையொட்டி சென்னை அணியின் வீரக்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Photo credit: R. Pugazh Murugan
ரஜினி ஸ்டைலில் போஸ் – தோனி விளக்கம்
இந்நிலையில், கேப்டன் தோனி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016-ல் வெளிவந்த படம் ‘கபாலி’. இந்தப் படத்தில் அவர் கோட் போட்டுக் கொண்டு, நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்திருப்பார். அதுவே படத்தின் போஸ்ட்டராகவும் வெளிவந்தது. இந்த நிலையில், அதே ஸ்டைலில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியும் போஸ் கொடுத்திருப்பார்.

இந்தப் புகைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தோனியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், “இதில் ஒப்பீடு எதுவும் இல்லை. ஒரு சிறந்த மனிதரின் சிறந்த போஸை காப்பி செய்ய முயன்றேன். அவ்வளவுதான். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. ஏனெனில், அவரை போல நடிப்பதும், யோசிப்பதும், செயல்படுவதும் மிகவும் கடினமானது. இருந்தாலும், அவரது போஸையாவது முயன்று பார்க்கலாம் என செய்ததுதான்.” என்று கூறினார்.

உங்களைப் போல யோசிப்பதும் மிகவும் கடினம் என்ற கேள்விக்கு, ‘களத்தில் வேண்டுமானால் இருக்கலாம்’ என தோனி மிகவும் எளிமையாக பதில் கூறினார்.

இது தொடர்பான வீடியோவை சென்னை அணியின் அதிரகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Super Star and the Super King! 😎🔥#WhistlePodu #Yellove 🦁💛 @TheIndiaCements pic.twitter.com/pSLUp0EmS1
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil